விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!

வியாழன், 16 அக்டோபர் 2025 (15:27 IST)

விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடனான கலந்துரையாடலில் சத்குரு பேசினார். 

 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ஒரு அங்கமாக இயங்கும் பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையத்தில், சத்குரு சென்டர் ஃபார் கான்ஷியஸ் பிளானட் சார்பில், “விழிப்புணர்வு, அறிவியல், ஆன்மீகம் மற்றும் உலகளாவிய தாக்கம் 2025” என்ற தலைப்பில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. 

 

இதில் ‘விழிப்புணர்வான விண்வெளி ஆய்வுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சத்குருவுடன் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி விஞ்ஞானி காவ்யா மான்யபு உள்ளிட்டோர் உரையாடினர். 

 

இந்த உரையாடலின் போது பேசிய சத்குரு, "நீங்கள் தொடர்ந்து அதிகளவில் அதிகாரம் பெறும்போது, அதே அளவு அனைத்தையும் உள்ளடக்கிய, அரவணைத்து செல்லக்கூடிய தன்மைக்கு மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்களுக்கும் மற்ற  அனைவருக்கும் ஒரு பேரழிவாக மாறிவிடுவீர்கள். நமது மனநிலையில் பாடுபாடு இருந்தால், மனிதகுலம் அதன் பாகுபாடுகளை விண்வெளியில் கூட கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. அங்கு போட்டியை விட ஒத்துழைப்பின் மூலம் தான் அதிகமாக சாதிக்க முடியும்.

 

நமது வேறுபாடுகளில் நாம் நிறைய முதலீடு செய்துள்ளோம், அந்த வேறுபாடுகள் பாகுபாடாக முதிர்ச்சியடைந்துள்ளன. ஒருவரையொருவர் கொல்லத் தயாராக இருக்கும் அளவிற்கு கடுமையான பாகுபாடாக அது உள்ளது. இந்த அளவிலான பாகுபாட்டுடன், அதிக அதிகாரம் பெறுவது இன்னமும் ஆபத்தை அதிகரிக்கிறது.

 

நாம் இந்த கிரகத்தை விட்டு ஆய்வுகளுக்காக வெளியே செல்லும் போது, ​​நமது வேறுபாடுகளை விட்டுவிட வேண்டும். நாம் கருப்பாகவோ, வெள்ளையாகவோ, ஆணாகவோ, பெண்ணாகவோ, அமெரிக்கராகவோ அல்லது வேறு ஏதாவது ஒருவராகவோ இருந்தாலும் சரி அதையெல்லாம் விட்டுவிட வேண்டும். விண்வெளி ஆய்வு என்பது மனிதனின் அறிந்து கொள்ளத் துடிக்கும் ஏக்கத்தால் இயக்கப்பட வேண்டும். அது ஒரு அமெரிக்கரின் அல்லது ரஷ்யரின் அறிந்து கொள்ளத் துடிக்கும் ஏக்கமாகவோ இருக்கக்கூடாது. அது ஒரு மனிதனின் அறிந்து கொள்ளத் துடிக்கும் ஏக்கமாக இருக்க வேண்டும். மேலும் அது ஒரு ஒத்துழைப்பாக மாற வேண்டும்." எனக் கூறினார். 

 

சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், பூமியை சுற்றுப்பாதையில் இருந்து பார்ப்பது குறித்த பகிர்ந்து கொண்டார். "நீங்கள் விண்வெளியில் இருந்து, அந்த கண்ணோட்டத்தில் பூமியைப் பார்க்கும்போது, ​​எல்லைகளைக் காண முடியாது. இந்த பரந்த பிரபஞ்சத்தில் மிதக்கும் ஒரு சின்னஞ்சிறிய மண் பந்தை மட்டுமே காண முடியும். நமக்குத் தெரிந்த அனைத்தும் அது மட்டும் தான். இது நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், ஒரே வீட்டைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை உங்களுக்கு உணர்த்தும். விண்வெளியில் வாழ்வதன் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று, இந்த நேரத்தில் என்ன பணி கையில் உள்ளது என்பதில் கவனம் செலுத்தும் திறன் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். 

 

‘சத்குரு சென்டர் ஃபார் கான்ஷியஸ் பிளானட்’ என்ற முன்னெடுப்பு ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மயக்கவியல் பேராசிரியர் டாக்டர் பால சுப்பிரமணியத்தின் தலைமையின் கீழ் பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையத்தில் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஈஷாவில் சத்குரு அவர்களால் வடிவமைக்கபட்ட யோகா மற்றும் தியான முறைகள் மனிதர்களின் மூளை மட்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நலன்கள் குறித்து நீண்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு முடிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்