சீனா – அமெரிக்கா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியான மோதல், வர்த்தக மோதல் என தொடர்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் பதற்றம் எழுந்துள்ளது. சமீபத்தில் தைவானுடன் ராணுவ உறவு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா தனது கப்பலை தைவான் ஜலசந்தியில் கொண்டு சென்று சீனாவிற்கு போக்கு காட்டியது. இந்நிலையில் தைவான் எல்லை மீறி சீன எல்லைகளை ஆக்கிரமித்திருப்பதாக கூறி அதன் மீது போர் தொடுக்க எல்லையில் ஆயுதங்களை குவித்துள்ளது சீனா. மேலும் தைவானுக்கு தனி நாடு அந்தஸ்து தர வேண்டாமென மற்ற நாடுகளையும் சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.
சீனாவின் இந்த செயல்களுக்கு பதிலளித்துள்ள தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு “தைவானின் தனி நாடு அந்தஸ்தை பறிக்கவும், தைவான் மீது போர் தொடுக்கவும் சீனா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சீனா தைவானை தாக்கினால் உதவிக்கு அமெரிக்கா வரும் என நம்புகிறோம். இதனால் தைவான் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.