எறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாமா

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (00:07 IST)
நல்ல தோற்றமும், மொறு மொறுவென்ற சுவையும் உள்ள, நன்கு விரிந்த பின்பகுதி கொண்ட எறும்புகளுக்கு கொலம்பியாவில் உணவை அலங்கரிக்கும் பொருள் என்ற வகையில் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால், அதுபோன்ற எறும்பை பிடிப்பதற்கு, நீங்கள் ஆயிரக்கணக்கான சிப்பாய் எறும்புகளை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

கொலம்பியாவில் ஆண்டிஸ் மலைத் தொடரில் காலனி ஆதிக்க காலத்தைச் சேர்ந்த பரிச்சரா என்ற நகரில் ஓர் ஆண்டில் முக்கியமான நாள் என்பது கிறிஸ்துமஸ் நாளோ, புத்தாண்டோ அல்லது ஈஸ்டரோ கிடையாது. `The Exit' என அவர்கள் குறிப்பிடும் நாள் தான் வருடத்தின் முக்கியமான நாளாக அவர்களுக்கு உள்ளது.

அந்த நாள் நெருங்கும் போது கூழாங்கற்கள் பதித்த தெருக்களையும், வெள்ளையடித்த கட்டடங்களையும் கொண்ட பரிச்சரா நகரில் ஒருவிதமான எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ளும். தெருவை சுத்தம் செய்பவர்கள், வீடுகளை சுத்தம் செய்பவர்கள் இடையிலேயே வேலையை நிறுத்துவிடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியே வந்து விடுவார்கள். கடைக்காரர்கள் திடீரென தடயமே இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.

ஹோர்மிகஸ் குலோனஸ் அல்லது ``பின்புறம் பெருத்த'' மதிப்புமிக்க எறும்புகளைத்தான் அவர்கள் அனைவரும் தேடுவார்கள். கொலம்பியாவில் வடமேற்கு சன்டன்டெர் பகுதியில் உணவை அலங்கரிக்க சேர்க்கப்படும் சிறந்த உணவாக இந்த பின்புறம் பெருத்த எறும்புகள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு இளவேனில் காலத்திலும், கொலம்பியாவில் நாட்டுப்புறப் பகுதியில், இந்த வகையான - பின்புறம் பெருத்த எறும்புகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யப்படுவதால், இந்தக் காலத்தில் வருடாந்திர அறுவடை போக்கு உருவாகிவிடுகிறது.

முதலில் வருபவருக்கு, முதலில் அளிப்பது என்பது தான் நடைமுறையாக உள்ளது'' என்று 2000வது ஆண்டில் பரிச்சரா நகரில் குடியேறிய முன்னாள் உளவியல் நிபுணரான இப்போதைய சமையலர் மார்கரிடா ஹிகுவேரா கூறினார். ``உங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எறும்புகளுக்காக நீங்கள் விரித்த வலையில் ஒரு பக்கெட் அளவுக்கு எறும்புகள் கிடைத்தாலும் அது உங்களுக்குச் சொந்தமானது தான்'' என்று அவர் விவரித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இது நடைபெறும். கன மழைக் காலம் முடிந்து, வெயில் தொடங்கும் நிலையில், முழு நிலவு நாளில், The Exit நாள் கடைபிடிக்கப்படுவது, எறும்புகள் இனச் சேர்க்கை காலத்தைக் குறிப்பதாக இருக்கும். அது இரண்டு மாத காலம் வரை நீடிக்கும். ராணி எறும்புகளை தங்கள் முடிந்த வரை அதிக அளவில் சேகரிக்க, அந்த நாட்களில் உள்ளூர் மக்கள் முண்டியடித்துக் கொண்டு செயலில் இறங்குகிறார்கள். முட்டைகள் நிரம்பி, இனப் பெருக்கத்துக்குத் தயாரான நிலையில் இருக்கும், பிரவுன் நிறத்தில், கரப்பான் பூச்சி அளவில் இருக்கும் ராணி எறும்புகள், வேர்க்கடலை வடிவிலான உருண்டையான பின்புறம் கொண்டதாக இவை இருக்கும். அவற்றை உப்பு போட்டு வறுத்தால், வேர்க்கடலை, பாப்கார்ன் அல்லது மொறு மொறுப்பான பன்றி இறைச்சியைப் போன்ற ருசியைத் தருவதாகக் கருதுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்