இலங்கை தமிழர்கள் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு....

திங்கள், 9 மே 2022 (22:47 IST)
கரூர் அருகே புதிதாக இலங்கை தமிழர்கள் முகாம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு.
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர்கள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வசித்து வருகின்றனர். அடுத்த தலைமுறையினரும் வந்து விட்டதால் குடும்பங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தோரணக்கல் பட்டி கிராமம் 263, 264, 265 சர்வே எண்ணில் உள்ள புறம்போக்கு நிலத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை சுற்றி நாயக்கர், அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர்களின் ஊர்கள் இருப்பதாகவும், கோவில் வழிபாட்டிற்காக விட்ப்பட்டுள்ள மந்தையை பாதையாக பயன்படுத்தும் நிலை இருப்பதால் அவற்றை அமைக்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்து அப்பகுதி கிராமத்தினர் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால், கடந்த ஒரு வார காலமாக நடவடிக்கைகள் எடுக்கப்படாதததால் வரும் 13ம் தேதி கரூர் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி அந்த கிராமத்தை சார்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் திரண்டு பேரணியாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதுடன் 5 பேரை மட்டுமே ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர். இதனையடுத்து அவர்கள் ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து மனு அளித்து விட்டுச் சென்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்