ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது.
மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த இந்த சூறாவளி, உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதன் வேகம் மணிக்கு 165 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதால், இது இரண்டாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டது. ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை.