”இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போல ஆயிரம் தடவை தாக்குவோம்” அல்-கொய்தா மிரட்டல்

சனி, 10 செப்டம்பர் 2016 (13:14 IST)
’இரட்டை கோபுரம் இடித்து தகர்க்கப்பட்டது போன்று ஆயிரம் தடவை தாக்குவோம்’ என அமெரிக்காவுக்கு அல்-கொய்தா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.


 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்டது.
 
பின்லேடன் தலைமையில் இயங்கிய அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பயணிகள் விமானத்தை கடத்தி வந்து அதன் மீது மோத வைத்து தாக்குதல் நடத்தினர். அதில் 2,753 பேர் பலியாகினர்.
 
இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா அல்-கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடனை, பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது சில ஆண்டுகளுக்கு முன் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
எனவே இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 15-வது நினைவு தினம் அமெரிக்காவில் நாளை (11-ந்தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அல்- கொய்தா தீவிரவாத அமைப்பின் புதிய தலைவர் அஸ்மான் அல்-ஜவாரி ‘யூ டியூப்’ இணைய தளத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில், ‘‘அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து அங்குள்ள கிரிமினல் மற்றும் ஊழல் அரசுகளுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். எங்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் (அமெரிக்கா) ஈடுபட்டு வருகிறீர்கள். அது தொடர்ந்து நடைபெற்றால் இரட்டை கோபுரம் தகர்ப்பு போன்று ஆயிரம் தடவை உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்