வெனிசுலாவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

ஞாயிறு, 13 செப்டம்பர் 2009 (13:11 IST)
கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால், வெனிசுலா தலைநகர் கராகஸ், எல் பலிடோ, ஷுலியா இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின.

இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர். சில வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 7க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், தலைநகர் உட்பட பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவின் ஷுலியா பகுதி நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பீதி மக்களிடம் இருந்து இன்னும் அகலவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்