மும்பைத் தாக்குதலில் முகமது சயீத்திற்கு எதிராக ஆதாரம் இல்லை: பாகிஸ்தான்

செவ்வாய், 28 ஜூலை 2009 (11:28 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஜமாத்-உத்-தாவா இயக்கத்தின் தலைவர் ஹஃபீஸ் முகமது சயீத்திற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவரைக் கைது செய்ய முடியாது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அளித்துள்ள பேட்டியில், மும்பைத் தாக்குதலில் சயீத்திற்கு தொடர்பு உள்ளது என்ற ஒரு குற்றச்சாற்றை மட்டும் வைத்து அவரை கைது செய்ய முடியாது. அவருக்கு எதிரான ஆதாரங்களை வழங்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரியுள்ளோம்.

சயீத்திற்கு எதிரான ஆதாரங்கள் இந்தியாவிடம் இருந்தால் அதனை எங்களிடம் வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரி வருகிறோம். ஆதாரம் இல்லாமல் வதந்தியை மட்டும் நம்பி எங்கள் நாட்டைச் சேர்ந்தவரை நாங்கள் கைது செய்ய முடியாது.

மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது உறுதியான நடவடிக்கை தேவை என இந்தியா விரும்பினால், உடனடியாக ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதலில் இந்தியர்களுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்ச்சாற்றியுள்ள மாலிக், இத்தாக்குதலுக்கு உதவிபுரிந்த இந்தியர்களைப் பற்றியும் இந்திய அரசு விசாரித்து, பாகிஸ்தானுக்கு ஆதாரங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு படகில் வந்த பயங்கரவாதிகள் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் இருந்து தப்பியது எப்படி? என்றும், அந்தப் படகிற்கு கடலில் எரிபொருள் வழங்கியது யார்? என்று கேள்விக்கான பதிலையும் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் எனக் மாலிக் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்