மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்போவதில்லை - ஷாருக்

ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2009 (17:52 IST)
கலைநிகழ்ச்சிக்காக சென்றபோது, அமெரிக்க விமான நிலையத்தில் தன்னிடம் 2 மணி நேரம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் தொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளை மன்னிப்பு கேட்குமாறு கோரப்போவதில்லை என்று நடிகர் ஷாரூக்கான் கூறியிருக்கிறார்.

முன்னதாக நேற்று பாலிவுட் உலகில் இருந்து அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் செய்கைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டது. ஷாருக்கானின் ரசிகர்களும் கண்டனம்
வெளியிட்டனர்.

அம்பிகா சோனி கருத்து: ஷாருக்கானிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, இதேபோன்ற நடவடிக்கையை தம்மிடமும் அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறினார்.

ஷாருக்கிடம் விசாரணை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மூலம், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த கண்டனத்தைக் குறைக்கும் வகையில் சிகாகோவில் இருந்து ஷாருக் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிகாரிகளின் செயல் வழக்கமான நடைமுறை என்றும், அதற்காக யாரையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தாம் கோரப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அந்த நடைமுறை துரதிர்ஷ்டமானது என்றும் அவர் கூறினார்.

நேவார்க் விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் ஷாருக்கிடம் அதிகாரிகள் கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவரது பெயர் சாதாரண செக்லிஸ்ட்-ல் இடம் பெற்றிருந்ததால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்