போர் குற்றம் குறித்து என்னிடமே விளக்கம் கேட்க வேண்டும் :யு.எஸ். மீது ராஜ பக்ச பாய்ச்சல்

திங்கள், 2 நவம்பர் 2009 (19:55 IST)
வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிய வேண்டும் என்றால் முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் போருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவன் என்ற வகையில் தன்னிடம் விளக்கம் கேட்குமாறு இலங்கை அதிபர் ராஜ பக்ச, அமெரிக்காவுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த போரின்போது,போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.

மே 2 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அயலுறவுத் துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்கும் நோக்கத்துடன் பொன்சேகா,தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவரது இந்த வருகையை பயன்படுத்தி,இலங்கையின் போர் குற்றம் தொடர்பாக பொன்சேகாவிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இலங்கை அதிபரின் சகோதரரும், ராணுவ செயலருமான கோத்தபயா எந்தெந்த முறையில் போர் விதிமுறைகளை மீறியுள்ளார் மற்றும் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை விளக்கும்படி அமெரிக்க உள்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

வருகிற புதன்கிழமையன்று பொன்சேகாவிடம் அவர்கள் இது குறித்து விசாரண நடத்த உள்ளனர்.இந்நிலையில், அமெரிக்காவின் இந்த விசாரணை குறித்து ராஜ பக்ச கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

அமெரிக்காவின் விசாரணைக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை மூலம் தனது கடும் எதிர்ப்பையும், விளக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ள அவர்,வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிய வேண்டும் என்றால் முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் போருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவன் என்ற வகையில் என்னிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் ; அதைவிடுத்து வேறு யாருரிடமும் கேட்பது பொருத்தமில்லாது என அதில் கூறியுள்ளார்.

தனது இந்த கருத்தை அமெரிக்காவுக்கு தெரிவிக்குமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் ராஜபக்ச கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்