பாகிஸ்தான்: வெள்ளத்தினால் 32 லட்சம் பேர் பாதிப்பு

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2010 (19:12 IST)
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில், குறிப்பாக வடமேற்கு பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டிவிட்டதாக கூறப்படுகிற நிலையில், மழை வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

இதனால் சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வெளியேறி, வெட்டவெளியில் உள்ள மேடான பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதே சமயம் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் எதுவும் அரசு தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை என்றும், அரசு தங்களை கைவிட்டுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஆவேசத்துடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் சர்தாரி லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உல்லாச பயணம் மேற்கொள்வதற்கு பதிலாக, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கருதுவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்