தமிழே தெரியாது: புலம்பெயர் தமிழர்கள் மீது ராஜபக்ச பாய்ச்சல்

சனி, 12 மார்ச் 2011 (15:34 IST)
புலம் பெயர் தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுக்குத் தமிழே தெரியாது என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின்போது இதனைக் கூறிய அவர், மேலும் பேசியதாவது:

புலம் பெயர் தமிழர்கள் தமிழில் ஒரு வார்த்தையும் கூடப் பேசத் தெரியாதவர்கள் மட்டுமல்ல, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊர்களின் பெயர்களைக் கூட சரியாக அறியாதவர்கள்.

புலம்பெயர் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் எமது நாட்டுக்கு எதிரான தகவல்களைப் பரப்புவதில் முன்னிற்கின்றனர்.ஆயினும் அவர்களுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட ஒழுங்காக வராது.

அதே நேரம் எமது நாட்டைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருசிலர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது கூட இல்லை.இன்னும் சிலர் இங்கு அடிக்கடி வந்து போகவும் செய்கின்றார்கள்.அவர்களின் பெரும்பாலான உறவினர்கள் இங்குதான் நன்றாக வாழ்கின்றார்கள்.

ஆயினும் அவர்கள் அநியாயமான முறையில் எமது நாட்டைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று ராஜபக்ச மேலும் கூறினார்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வீழ்த்திவிட்டபோதிலும், தமிழீழ போராட்டம் தற்போது புலம்பெயர் தமிழர் கைகளுக்கு போய்விட்டதாலும், இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் முனைப்புடன் செயல்படுவதாலேயே ராஜபக்ச இவ்வாறு அவர்கள் மீது ஆத்திரத்துடன் பாய்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்