செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளை நெருங்கும் செயற்கைகோள்

சனி, 28 டிசம்பர் 2013 (15:44 IST)
FILE
செவ்வாய் கிரக சந்திரனை செயற்கைகோள் நாளை நெருங்குகிறது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தையும், அவற்றின் சந்திரன்களையும் ஆய்வு செய்ய மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

இது கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. தற்போது அது செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் ஆன ‘போபாஸ்’ அருகே சென்றுவிட்டது.

தற்போது ‘போபாஸ்’ சந்திரனின் மேற்பரப்பில் 45 கி.மீட்டருக்கு அப்பால் பறக்கிறது. இது நாளை (29-ந்தேதி) இதன் அருகில் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளினால் ‘போபாஸ்’ சந்திரனை படம் எடுத்து அனுப்ப முடியாது. ஆனால் அதன் புவியீர்ப்பு தன்மையை மிக துல்லியமாக சேகரித்து பூமிக்கு அனுப்ப முடியும்.

இது குறித்து ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் கூறும்போது, ‘‘மார்ஸ் எக்ஸ்பிரஸ் செயற்கைக்கோள் ‘போபாஸ்’ சந்திரனை நெருங்கும் போது புவியீர்ப்பு சக்தி அதை ஓரளவு தன் அருகே இழுக்கும்.

இதனால் செயற்கை கோளின் வேகம் வினாடிக்கு சில சென்டி மீட்டர் அளவு மாறுபடும். அதன் மூலம் செயற்கைகோளில் உள்ள ரேடியோ சிக்னலில் ஒரு மாற்றம் ஏற்பட்டு பூமிக்கு தகவல் அனுப்பும்.

அதன் மூலம் ‘போபாஸ்’ சந்திரனின் உள் அமைப்பு அதன் அளவு மற்றும் அமைப்பு போன்ற அனைத்து விவரங்களையும் விஞ்ஞானிகளால் கணக்கிட முடியும் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்