காட்டுத்தீயின் புகை மலேஷியாவையும் சூழ்ந்தது; சிங்கப்பூரில் அவசரநிலை

திங்கள், 24 ஜூன் 2013 (13:22 IST)
இந்தோனேஷியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் உருவான கடும் புகை சிங்கப்பூரை கடந்து மலேசியாவை அடைந்துள்ளது. இதனால் அங்கு 2 மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர காட்டுத்தீ கடந்த வாரம் ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயால் அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவுக்கும் கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீயால் உருவான கடும் புகை முதலில் இந்தோனேஷியாவின் அண்டை நாடான சிங்கப்பூரைச் சூழ்ந்தது. கடும் பனிமூட்டம் ஏற்பட்டதை போன்று பல நகரங்களில் புகை சூழ்ந்தது. சுத்தமான காற்றுக்காக சுவாச முகமூடிகளை அணிந்து மக்கள் நடமாடினர்.

இதனால் அங்கு பெரும்பாலான கடைகளில் முகமூடிகள் விற்று தீர்ந்தன. இந்நிலையில், காற்றின் ஓட்டத்தில் சிங்கப்பூரைத் தொடர்ந்து, மற்றொரு அண்டை நாடான மலேசியாவின் முவா, லெடாங்கில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இங்கு அடர் புகையால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலை நிலவுகிறது இதையடுத்து, 2 மாவட்டங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் 300 புள்ளிகளை எட்டினாலே காற்று கடுமையாக மாசடைந்துள்ளது என்று அர்த்தம். ஆனால், மலேசியாவில் தற்போது 746 புள்ளிகளாக மாசு அளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.



வெப்துனியாவைப் படிக்கவும்