இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போருக்கு பாக்.திட்டம்: அமெரிக்கா

சனி, 23 ஜூலை 2011 (13:48 IST)
இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காகவே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்க முப்படைகளின் துணைத் தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஏ.வின்னிபீல்ட் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த அறிக்கையில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகப் போர் தொடுப்பதற்காகவே பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று பாகிஸ்தான் இராணுவமோ, இந்தியாவை ஒரு எதிரி நாடாகவே சித்தரித்து வருகிறது.

ஆப்கனிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது தங்களுக்கு அச்சுறுத்தல் என தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் குறிப்பிட்டு வருகிறது.இதன் மூலம் பிற நாடுகளின் அனுதாபத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அது முயன்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் நுழைந்தபோது அதை எதிர்த்துப் போராடிய குழுக்களை பாகிஸ்தான் இராணுவம் ஊக்குவிக்கிறது.ரஷ்ய படையை விரட்ட உதவியதற்கு நன்றிக் கடனாக இக்குழுக்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவி வருகிறது.

ஆனால் பாகிஸ்தான் இராணுவம் புலி வாலைப் பிடித்துவிட்டது. ஒருகட்டத்தில் பயங்கரவாத குழுக்களே பாகிஸ்தான் இராணுவத்தைக் கட்டுப்படுத்தும் என்ற விபரீதத்தை அவர்கள் உணரவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் வின்னிபீல்ட் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்