அமெரிக்க இராணுவத்தில் சீக்கியர்கள் தலைப்பாகையுடன் பணிபுரிய அனுமதிக்க ஆதரவு

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (20:11 IST)
அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட சீக்கியர்கள் அவர்களது பாரம்பரிய மதச் சின்னமான தலைப்பாகையுடன் பணிபுரிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்க்கு எழுதியுள்ள கடிதத்தில், அவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிய அமெரிக்க வாழ் சீக்கியர்களான கேப்டன் கமால்ஜித் சிங் மற்றும் இரண்டாம் நிலை லெப்டினன்ட் தேஜ்தீப் சிங் ரத்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் கமால்ஜித் சிங் டாக்டராவார்.தேஜ்தீப் சிங் ரத்தன் பல் டாக்டராவார்.

இந்நிலையில், இவர்கள் முதல் நாள் பணியில் சேர சென்றபோது அவர்கள் அணிந்திருந்த தலைப்பாகையை கழற்றிவிட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இது குறித்த செய்தி வெளியில் பரவியதைத் தொடர்ந்து சர்சை ஏற்பட்டது.சீக்கியர்களை அவர்களது மதச்சின்னத்துடன் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க வாழ் சீக்கிய அமைப்புகள், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸை வலியுறுத்தின.

அத்துடன் கனடா, ஸ்வீடன் மற்றும் இதர நாடுகளின் பாதுகாப்பு படைகளில் சீக்கியர்கள் தலைப்பாகையுடன் பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில், சீக்கியர்களின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்