புலிகள் காப்பகங்கள் மூடப்பட்டன
புதன், 17 மார்ச் 2010 (11:45 IST)
ஆனமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் புலிகள் காப்பகங்கள் மூடப்படுகின்றன. சுற்றுலாப் பயணகளுக்கு அனுமதி தடை செய்யப்படுவதாகவும் வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி, டாப் சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுச கி.மீ. பரப்பளவு கொண்டது.
இந்த வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், சிங்கவால் குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விதமான விலங்குகள் மட்டுமல்லாமல், பல்வேறு வகையான பறவை இனங்களும் வசிக்கின்றன.
பொதுவாக கோடைக் காலத்தில் இப்பகுதியில் வறட்சியின் காரணமாக தண்ணீர் பிரச்சினை ஏற்படுவது சகஜம். அதுபோல இந்த ஆண்டு கோடை காலம் துவங்கும் போதே வறட்சியும் துவங்கிவிட்டது. குடிநீருக்காக வன விலங்குகள் ஆங்காங்கே சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆனமலை புலிகள் காப்பகத்தில் நீர் பற்றாக்குறையினாலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பின்மை காரணமாகவும் ஆனைமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை காப்பகம் மூடப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வன விலங்குகள் பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் காட்டில் ஏற்படும் வெப்பமும், வறட்சியும் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திவிடும். வனத்தையும், வன விலங்குகளையும் காப்பாற்றும் நோக்கத்தில் புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாப் சிலிப், ஆழியாறு, குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவியின் மேல்பகுதி, சின்னாற்று கோடந்தூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அமராவதி வனச் சரகத்தில் முதலை பண்ணையில் இருந்து தூவனம் வரை, சரக்குப்பட்டியில் இருந்து கூட்டாறு வழியாக தளிஞ்சி வரை சுற்றுலாப் பயணிகள் செல்லக் கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை விடுமுறைக் காலம் துவங்க உள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களான ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.