கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலமான டாப் ஸ்லிப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
webdunia photo
WD
தினந்தோறும் கணிசமான சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் பசுமையாக காட்சி தரும் டாப் ஸ்லிப் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் யானைகள், புலி, சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள், பறவைகள் ஏராளமாக உள்ளன.
இப்பகுதியைக் காண வனத்துறையினரின் அனுமதிப் பெற்றே செல்ல வேண்டும்.
டாப் ஸ்லிப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கோழிக்கமுத்தியில் கும்கி யானைகள் முகாம் உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இயற்கை அழகு மற்றும் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சிறப்பு வசதியாக யானை சவாரி நடத்தப்படுகிறது. இப்பகுதியில் யானை சவாரி மட்டுமே போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாப் ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
டாப் ஸ்லிப் வனச்சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் கூறுகையில், தொடர் மழையால் யானைகள் வனப்பகுதிகளில் பாதுகாப்பாக சென்று வருவதில் சிக்கல் உள்ளது. அதனால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.