ஓம்காரமாய் திகழும் முழுமுதற் கடவுள்

Webdunia

வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (17:51 IST)
கஜாந நம்பூத கணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பக்‌ஷிதம்
உமாசுதம் சோக விநாஸ காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் விநாயகர் அருள் இன்றி அந்த செயல் கைகூடாது என்பதையே முழுமுதற் கடவுளாம் விநாயகர் என்று சொல்கிறோம்.

அந்த வகையில் முருகப்பெருமான், வள்ளிக் குறத்தியை மணம் முடிக்க தனது தமையனாம் விநாயகரை மறந்ததாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர், விநாயகப் பெருமானை வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் வள்ளியைத் திருமணம் செய்வதற்கு விநாயகர் உதவியதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'விநாயகர்'- என்ற பெயரிலேயே வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர் என்ற பொருள் உள்ளது.

வினைகளைக் களைபவர், வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை - வினைகளை - சோகங்களை - தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து - நாசம் செய்து அவர்களுக்கு நிம்மதியை அளிப்பவர் என்பதே விநாயகர் என்பதன் பொருள்.

தவிர விநாயகரின் உருவமே ஒரு விசித்திரத் தோற்றம் கொண்டது.

வேழ முகம் - யானையின் முகத்தை உடையவர். பொன்னிறத் தோற்றத்துடன் கூடிய மனித உடலில் தர்ப்பரி நூல் மார்பு, பேழை வயிறு. (மிகப்பெரிய பூதம் போன்ற வயிறு). துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகள். செந்தூரம் பூசிய முகம். சிலம்பு அணிந்த இரு கால்கள்.

இதுபோன்ற அனைத்து உருவங்களும் சேர்ந்ததே விநாயகப் பெருமானின் மொத்த வடிவம். விநாயகரின் உருவமே ஒரு ஐக்கியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது ஓம்கார ஒலி என்றால், அநத ஓம்காரமாய் திகழ்வது விநாயகர் என்றால் அது மிகையில்லை.

எனவே தான் விநாயகப் பெருமானை ஓம்கார நாயகர் என்றும் அழைக்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்