அன்னையும் விநாயகரும்!

சனி, 22 ஆகஸ்ட் 2009 (17:02 IST)
ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்து சாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார். இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்று அன்னையை வினவினார்.

அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களே அதே ரூபத்தில் - என் முன் தோன்றினார்.

என்ன வேண்டும் என்று வினவினார்.

எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.

எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால் உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தை நடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்க முடியுமா என்று அவரைக் கேட்டேன். ஆகட்டும் என்றார்.

அதன்பிறகு, ஆசிரமத்தின் நிதிப் பிரச்சனை முற்றிலுமாகத் தீர்ந்தது. ஒவ்வொரு முறையும் நிதிச் சிக்கல் எழுவதும், பிறகு அதற்கு தீர்வாக நிதி வருவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆசிரமத்தை விரிவுபடுத்துவதிலும் அவருடைய உதவியை நாடியுள்ளேன். இந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது" என்று அன்னை விரிவான பதிலளித்து முடித்தார்.

இதனை அன்னையின் நினைவுகள் (Vignettes of the Mother) என்ற ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தில் காணலாம்.

அன்னையினுடைய மேஜையில் விநாயகரின் திருவுருவச் சிலையும், அதேபோல முருகரின் திருவுருவச் சிலையும் எப்போதும் இருந்ததாக ஆசிரமவாசிகள் புதிவு செய்துள்ளனர்.

புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது மணக்குள விநாயகர் கோயில். மிகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலை விரிவாக்கம் செய்திட அக்கோயிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தபோது, அதற்கு இடம் தேவைப்பட்டது. கோயிலிற்கு அடுத்ததாக இருந்த கட்டடம் ஆசிரமத்திற்குச் சொந்தமானது. கோயில் அறங்காவலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை கோயிலிற்கு அளித்தார் அன்னை. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயிலின் தென்மேற்கு மூலையில் அன்னையின் கொடை குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்