எளிதான முறையில் அரிசி கூழ் வடகம் செய்வது எப்படி...?

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:47 IST)
தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்
ஓமம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்



செய்முறை:

முதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு ஆட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

இட்லி மாவு பதத்தில் அரைத்து அதனுடன் தேவையான அளவு ஓமம் சேர்க்கவும். அடி கனமான பாத்திரத்தில் எட்டு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். பின் அதனுடன் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாதவாறு கிளறிக் கொண்டே இருக்கவும்.

மாவு வெந்தவுடன் சிறிது நிறம் மாறி நல்ல வாசனையுடன் கூழ் பதத்திற்கு வரும். அது தான் வடகம் ஊற்றுவதற்கு சரியான பதம்.

அடுப்பை அணைத்து வடகம் கூழை இறக்கி விடவும். பின் சுத்தமான துணியை வெயில் படும் இடத்தில் விரிக்கவும். வடகம் கூழை ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து சின்ன கரண்டியை பயன்படுத்தி வட்டமாக ஊற்றவும்.

வடகம் நன்றாகக் காயும் வரை வெயிலில் காயவிடவும். வடகம் நன்றாகக் காய்ந்தவுடன் துணியைத் திருப்பி தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து துணியில் இருந்து எடுக்கவும்.

பின் ஒரு தட்டில் வைத்து ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு காயவைக்கவும். வடகம் சுருளக் காய்ந்ததும் சுத்தமான டப்பாவில் காற்றுப் புகாதவாறு வைக்கக்கொள்ளலாம்.

குறிப்பு: கூழ் வத்தல் தயார் செய்யும் போது விருப்பமுள்ளவர்கள் மிளகாயை அரைத்து விழுதாகச் சேர்த்து தயார் செய்யலாம். ஓமம் சேர்ப்பதால் சீரண சக்தி எளிதாவதுடன், ஒரு வித நல்ல வாசனையுடன் வடாம் சாப்பிட ருசியாக இருக்கும். அரிசி மாவை கூழ் பதத்தினை விட கட்டியாகக் காய்ச்சி அச்சில் ஊற்றி முறுக்காப் பிழிந்து காயவைத்து வடகம் தயார் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்