பெங்களூர் விப்ஜியார் பள்ளி - வக்கிரத்தின் வெவ்வேறு நிறங்களும் சாயம் போன கலர்ஃபுல் கல்வியும்

வா.மணிகண்டன்

வியாழன், 24 ஜூலை 2014 (19:19 IST)
விப்ஜியார் (VIBGYOR) - வானவில்லின் இந்த ஏழு வர்ணங்களைத்தான் ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூர் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. இது வெறும் வானவில்லின் நிறங்கள் மட்டுமில்ல. பெங்களூரில் பள்ளியின் பெயரும் கூட. இந்தப் பள்ளியைத்தான் திட்டுகிறார்கள். அதன் நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துகிறார்கள். சாபம் விடுகிறார்கள். இது சாதாரணப் பள்ளி இல்லை. இந்தியா முழுவதும் மும்பை, லக்னோ உட்பட ஏழு நகரங்களில் இந்தப் பள்ளி செயல்படுகிறது. பெங்களூரில் மட்டுமே எட்டு இடங்களில். Chain of Schools. இந்தப் பள்ளியின் ஒரு வளாகத்தில்தான் ஆறு வயதுப் பெண் குழந்தையைச் சீரழித்திருக்கிறார்கள். 2014 ஜூலை 2ஆம் தேதியே சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பயிற்சியாளன் குழந்தையைப் பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்திருக்கிறான். நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிட்டான். குழந்தை பயந்துவிட்டது. யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் பிஞ்சு உடல் தாங்கவில்லை. சீர் குலையத் தொடங்கியிருக்கிறது. என்னமோ ஏதோவென்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தூக்கிச் செல்ல, அங்குதான் எவனோ கசக்கியிருக்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதைக் கண்டுபிடிக்கும் போது சம்பவம் நிகழ்ந்து பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
 
பதறிய பெற்றோர், பள்ளியை அணுகியிருக்கிறார்கள். சரியான பதில் இல்லை. பிறகு காவல் துறையை அணுகி பிரச்சினை பெரிதாக்கப்பட்ட பிறகும் வெகு நாட்களுக்குப் பெரிய நடவடிக்கைகள் இல்லை. பள்ளி நிறுவனர் பெரும் புள்ளி. ஏற்கனவே மிகப் பெரிய தொழிலதிபர் - ருஸ்டோம் கெரவாலா என்ற அந்த மனிதர் மும்பையில் ஏகப்பட்ட ஹோட்டல்களை நடத்தி, கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். தனது கார்பொரேட் மூளையை வேறு எங்கு பயன்படுத்தினால் அள்ளியெடுக்கலாம் என யோசித்த போது கண்ணில் சிக்கிய தொழில்தான் கல்வி. எவ்வளவுதான் முட்டாளாக இருந்தாலும் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். கார்பொரேட் மனநிலையுடன் ஆரம்பித்தால்? ஒரு மாணவருக்கு கிட்டத்தட்ட லட்சத்தில் ஃபீஸ். பெங்களூர் முழுவதும் பள்ளி கொடிகட்டிய போதுதான் இந்தப் பிரச்சினை வெடித்துவிட்டது.
 
விடுவார்களா நிர்வாகத்தினர்? எங்கள் பள்ளியில் நடக்கவே இல்லை என்றார்கள். யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அவசர அவசரமாகத் தரவுகளை அழிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரம் கசிந்து, பள்ளிக்கு ஏதேனும் பாதிப்பென்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் உண்டாகும் அல்லவா? அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க, ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா?’ என்று முதலமைச்சர் சித்தராமையா வெறுப்படைந்தார். மாநகர கமிஷனராக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் மீது சந்தேகம் திரும்பியது. அவரால்தான் விசாரணை சுணங்குகிறது எனப் பேச்சு எழ அவரைத் தூக்கியடித்தார்கள். இப்பொழுது புது கமிஷனர் வந்திருக்கிறார். அதன் பிறகுதான் பள்ளி நிறுவனர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரே நாள்தான். காலையில் கம்பி எண்ணச் சென்றவர், மாலையில் வீடு திரும்பிவிட்டார். ஜாமீன் கொடுத்துவிட்டார்கள். இனி, தரவுகளை அழிக்கமாட்டாரா? 
 
 
இது ஒரு சாம்பிள் சம்பவம்தான். கல்வியை வியாபாரமயமாக்கிவிட்டு வெறும் பொருளீட்டுவதற்கான தொழிலாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதிகள் ஓய்வு பெறும் காலத்தில் சம்பாதிப்பதற்கு வாகான தொழிலாகக் கல்வி மாறிவிட்டது. திருடர்களும் ரவுடிகளும் தங்களின் சம்பாத்தியத்தை முதலீடு செய்வதற்காகக் கல்விச் சாலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் கல்வித் தந்தை என்றால் மரியாதை இருக்கும். நேர்மையாளர்கள், கல்வியாளர்கள், பண்பாளர்களைத்தான் அப்படி அழைத்தார்கள். இப்பொழுது கவனித்தால் தெரியுமே - அயோக்கியனும் பண முதலைகளும்தான் கல்வித் தந்தைகள். எப்படி விளங்கும்?
 
இத்தகைய சம்பவங்களை முற்றாகத் தடுப்பது என்பது சுலபமில்லைதான். நம்மைச் சுற்றிலும் மிருகங்கள்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்களுக்குக் குழந்தைகளும் தெரியாது கிழவிகளும் தெரியாது. காமம் கண்களை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறு வயது குழந்தையென்றாலும் சீரழிக்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவி என்றாலும் சீரழிக்கிறார்கள். ஆனால் பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் பதினொரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக் கழிக்கிறார்கள் பாருங்கள். அதற்காகத்தான் இவர்களை அடித்து நொறுக்க வேண்டும். ஆறு வயதுக் குழந்தையை ஒரு வக்கிர மனிதன் கசக்கியிருக்கிறான் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனது தொழில் பாதிக்கப்படும் என்று ஆதாரங்களை அழிக்கிறார்கள் அல்லவா? அதற்காகவே என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். 
 


 
கல்வியைப் பணம் கொழிக்கும் தொழிலாகப் பார்ப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். எங்கள் பள்ளியில் நடக்கவில்லை என்று புரட்டுகிறார்கள். அப்படியே வெளியில் தெரிந்தால் காசை வீசி ஆதாரங்களை அழிக்கிறார்கள். எவ்வளவு குரூர மனநிலையாக இருக்க வேண்டும்? 
 
ஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் ஃபீஸ் என்றாலும் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். இந்த வளாகத்தில் மட்டும் மூவாயிரத்து ஐந்நூறு குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த கார்பொரேட் கல்வி வியாபாரிகளுக்குக் குழந்தைகள் ரத்தமும் சதையுமான உயிர்கள் இல்லை. வெறும் பணம். அவ்வளவுதான். சென்னையிலும் பெங்களூரிலும் என்றில்லை. எந்தச் சிறு நகரத்திலும் தனியார் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் கல்வி தரமில்லை என்கிறார்கள். ஆசிரியர்கள் சரி இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு பணம் போனால் போகட்டும் என்று பெற்றோர்கள், கலர்ஃபுல்லான தனியார் பள்ளிகளுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் வேட்டை நடத்துகிறார்கள். வெறும் மதிப்பெண் வாங்கும் ப்ராய்லர் கோழிகளாக தங்கள் குழந்தைகளை மாற்றிக் கொடுங்கள் போதும் என்று பெற்றவர்கள் விரும்புகிறார்கள். தேதி தவறாமல் மாமூல் கொடுத்தால் போதும் என்பதோடு அரசும் அதிகார வர்க்கமும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இதைப் பயன்படுத்தி, கல்வித் தந்தைகள் சம்பாதித்துக் குவிக்கிறார்கள். பெற்றோர்களின் சட்டையில் மட்டுமில்லை இதயத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். 
 
பள்ளிக் கல்வி என்பது வெறும் பணத்தையும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சீரழிந்துகொண்டிருக்கிறது. பள்ளிக் கல்வியின் வணிகமயமாக்கலைத் தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும். அரசாங்கங்கங்கள் தொலைநோக்கோடு யோசித்தால் கூடிய சீக்கிரம் கல்வியை அரசுமயமாக்கிவிடலாம். இது சாதாரணக் காரியமில்லைதான் ஆனால் சாதிக்க முடியாத விஷயமில்லை. கல்லூரிகளை விட்டுவிடலாம். குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை மட்டுமாவது தனியார்களிடமிருந்து பறிக்க வேண்டும். கல்வி என்பது பணம் காய்ச்சி மரம் இல்லை என்ற நிலைமையை அரசாங்கம்தான் உருவாக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத் திட்டம் என்ற சூழலை உருவாக்கி. பள்ளிக் கல்வியில் அனைத்துக் குழந்தைகளும் சமம் என்கிற நிலைமை வர வேண்டும். ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்