ரசம் மணமாக இருக்க...

திங்கள், 9 மே 2011 (18:16 IST)
ரசம் மணமாக இருக்க...

சாதத்துக்குப் பிசைந்து சாப்பிடும் கறிவேப்பிலைப் பொடி வீட்டில் வைத்திருக்கிறீர்களா? ரசம் கொதித்து இறக்கப் போகும் சமயம் இந்தப் பொடியைக் கொஞ்சம் தூவி இறக்கிக் கொண்டால், மிகவும் சுவையாக மணமாக இருக்கும்.

பெருங்காயம் பயன்படுத்தும் போது...

சில பேருக்குப் பெருங்காயப் பொடி போட்டுச் சமைத்தால் அவ்வளவாகத் திருப்தி ஏற்படாது. ஆனால் அவசரத்துக்குக் கட்டிப் பெருங்காயம் உதவாது. இதற்கு ஒரு வழி இருக்கிறது. கட்டிப் பெருங்காயத்தை எண்ணெய்விடாமல் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் சட்டென்று பயன்படுத்த முடியும்.

ஆப்பிள் நறுக்கும்போது...

ஆப்பிள் பழம் நறுக்கினால் உப்பு நீரில் ஒரு முறை போட்டு எடுங்கள். பிறகு எத்தனை நேரம் ஆனாலும் அது கறுப்பாக ஆகாது. வாழைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றையும் இப்படியே செய்யலாம்.

திராட்சை சாறு செய்யும்போது...

திராட்சையைக் கொண்டு சாறு (கிரேப் ஜூஸ்) செய்வதற்கு முன்பு அதை ஐந்து நிமிடம் வெந்நீரில் ஊறப் போடுங்கள். நிறையப் பழச்சாறு கிடைக்கும்.

சேனைக்கிழங்கு நறுக்கும்போது...

கையில் எண்ணெய் தடவிக் கொண்டு சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு இவற்றை நறுக்கினால் கை அரிக்காமல் இருக்கும். காய்நறுக்கி முடித்தவுடன் புளிக்கரைசலில் கைகழுவிவிட வேண்டும்.

சோமாசி செய்யும்போது...

சோமாசி செய்யும்போது பூரணம் உதிர்த்துவிடாமல் இருக்க பூரணத்தில் சிறிது நெய்விட்டுப் பிசிறி அடைத்தால் உதிராது.

சர்க்கரை பாகு சுத்தமாக இருக்க...

எப்போது சர்க்கரைப் பாகு வைத்தாலும் அதில் இரண்டு ஸ்பூன் பாலை ஊற்றுங்கள். சர்க்கரையில் உள்ள அழுக்கு, பாலுடன் சேர்ந்து நுரைபோல் மேலே வரும் அதை மேலோடு எடுத்து ஊற்றிவிட்டால் பாகு சுத்தமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்