குழந்தைகளுக்கு சிறந்த புத்தகங்கள்! - சர்வதேச குழந்தைகள் புத்தக நாள்

ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (09:36 IST)
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day - ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

• புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
• குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாடும் முன்முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு, ஒவ்வோராண்டும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு நாட்டுப் பிரிவிற்கு வழங்கப்படும். அந்நாடு அவ்வாண்டிற்கான கொண்டாட்டக்கருத்தை முடிவு செய்து, தன்நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலகக் குழந்தைகளுக்கு அவ்வாண்டிற்கான செய்தியை எழுதவும் நன்கறியப்பட்ட ஓவியரை அழைத்து அவ்வாண்டிற்கான சுவரொட்டியை வடிவமைக்கவும் செய்யும். அந்த செய்தியும் சுவரொட்டியும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள், படித்தல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும்.

பன்னாட்டு குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாட இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு பிரிவுகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

• மக்கள்திரள் ஊடகங்களின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

• பள்ளிகள், பொதுநூலகங்கள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தப்படுகின்றன.

• குழந்தைகளின் புத்தகங்களைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள நடத்தப்படுகின்றன.

• எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல், இலக்கியப் படைப்புப் போட்டி, புத்தகங்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைப் பார்ப்போம்.

1. அந்தோணியின் ஆட்டுக்குட்டி - கமலவேலன்
2. ரயிலின் கதை-பெ.நா.அப்புஸ்வாமி
3. சிறுவர் கலைக்களஞ்சியம் – பெ.தூரன்
4. எங்கிருந்தோ வந்தான் – கோ.மா. கோதண்டம்
5. நல்ல நண்பர்கள் – அழ.வள்ளியப்பா
6. நெருப்புக்கோட்டை- வாண்டுமாமா
7. வாசித்தாலும் வாசித்தாலும் தீராது – பேரா.எஸ்.சிவதாஸ்
8. ஆயிஷா – இரா.நடராசன்
9. குட்டி இளவரசன் – அந்துவான் எக்சுபரி – வெ.ஸ்ரீராம்
10. சிறுவர் நாடோடிக்கதைகள் – கி.ராஜநாராயணன்
11. பனி மனிதன் – ஜெயமோகன்
12. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்
13. வாத்துராஜா – விஷ்ணுபுரம் சரவணன்
14. ஆமைகளின் அற்புத உலகம் – யெஸ்.பாலபாரதி
15. மாகடிகாரம் – விழியன்
16. ஜிமாவின் கைபேசி – கோ.மா.கோ.இளங்கோ
17. யானைச்சவாரி – பாவண்ணன்
18. அற்புத உலகில் ஆலிஸ் – லூயி கரோல் – எஸ்.ராமகிருஷ்ணன்
19. விரால் மீனின் சாகசப்பயணம் – உதயசங்கர்
20. புத்தகத்தேவதையின் கதை –பேரா.எஸ்.சிவதாஸ் – யூமாவாசுகி
21. ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா,
22. தரங்கம்பாடி தங்கப் புதையல், பெ. தூரன்,
23. சந்திரகிரிக் கோட்டை, ஆர்.வி.
24. கானகக் கன்னி, கல்வி கோபாலகிருஷ்ணன்
25. சிற்பியின் மகள், பூவண்ணன்.
26. தங்க மயில் தேவதை, முல்லை தங்கராசன்
27. மர்ம மாளிகையில் பலே பாலு, வாண்டுமாமா
28. கொடி காட்ட வந்தவன், ரேவதி
29. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) ச. தமிழ்ச்செல்வன்

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

1. அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு), புக்ஸ் ஃபார் சில்ரன்,
2. குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு,
3. நீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்), என்.சி.பி.எச். வெளியீடு,
4. ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்), வம்சி வெளியீடு,
5. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்), அறிவியல் வெளியீடு,
6. சாரி பெஸ்ட் ஃபிரெண்ட், ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்), புக்ஸ் ஃபார் சில்ரன்,
7. கானகத்துக் கீதங்கள், ஜித் ராய் (கு.ராஜாராம்), நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு,
8. பெனி எனும் சிறுவன், கிகோ புளூஷி, (யூமா வாசுகி), புக்ஸ் ஃபார் சில்ரன்,
9. புத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன்,
10. கனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்), எதிர் வெளியீடு
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்