கல்லைக் கண்டால் நாயைக் காணோம்...

நமது நா‌ட்டி‌ல் பல்வேறு பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறக் கேட்டுள்ளோம்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன. அவற்றை நாம் உச்சரிக்கும் வகையிலேயே எடுத்துக் கொள்ளக் கூடாது என்பத‌ற்கு சில பழமொழிகளை இங்கே உதாரணத்திற்கு கூறுகிறோம்.

அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.

அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சில நாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர்.

அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறு தான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி.

அடுத்தது, அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது பழமொழி.

இதனை நாம் மற்றவர்களை அடிக்கும் போதோ அல்லது அடி வாங்கும்போதோ எத்தனை முறை காதில் கேட்டிருக்கிறோம். இது தவறு.

அதாவது பழமொழியின் உண்மையான பொருள்... ஆண்டவனின் திருவடி நிழல் உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள் என்பதுதான். ஆண்டவனின் திருவடியைத்தான் அடி என்றார்களேத் தவிர, மற்றவர்களை துன்புறுத்தும் விதத்தில் நாம் அடிப்பதை அல்ல.

மற்றொன்று, யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.

எனவே அடுத்த முறை இந்த பழமொழிகளை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் உண்மையான விளக்கத்தை.

வெப்துனியாவைப் படிக்கவும்