ஸ்டேட் பாங்க் வட்டி குறைப்பு!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:23 IST)
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கால் விழுக்காடு வட்டியை குறைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கால் விழுக்காடு வட்டியை குறைப்பதாக மும்பை பங்குச் சந்தைக்கு அறிவித்தது. தற்போது இந்த வங்கி 12.75 விழுக்காடு வட்டி வசூலித்து வருகிறது. இதை 12.50 விழுக்காடாக குறைத்துள்ளது. இது பிப்ரவரி 16 ந் தேதி முதல் அமலுக்குவரும்.

இந்த வட்டி குறைப்பு பெரிய நிறுவனங்கள் வாங்கும் கடன், மாறும் வீட்டு கடன், வாகன கடன் உட்பட எல்லா வகை கடன்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே கனரா வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை வீட்டு கடன், நுகர்வோர் கடனுக்கு 1 விழுக்காடு வட்டியை குறைத்துள்ளன.

இதே போல் ஹெச்.ி.எப்.சி. வங்கி வீட்டு கடனுக்கு கால் விழுக்காடு வட்டியும், பஞ்சாப் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு கடனுக்கு அரை விழுக்காடு வட்டியும் குறைத்துள்ளன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வட்டியை குறைக்க போகிறது. இது நுகர்வோர் கடன் போன்ற குறிப்பிட்ட கடனுக்கு மட்டும் கால் விழுக்காடு வட்டியை குறைக்கும் என தெரிகிறது.

வட்டி குறைப்பு பற்றி, இதன் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ.பட் செய்தியாளரிகளிடம் இன்று கூறுகையில், வருகின்ற வெள்ளிக் கிழமை வங்கியின் சொத்து- கடன் குழு கூட்டம் நடை பெறவுள்ளது. இதில் வட்டி குறைப்பு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் இது வைப்பு நிதிக்கும் வழங்கும் வட்டியை குறைப்பது பற்றி மார்ச் மாதத்தில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாளை புது டெல்லியில் வங்கிகளின் சேர்மன், மேலாண்மை இயக்குநர்களை சந்திக்க உள்ளார். இதில் வட்டி குறைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.ி.ரெட்டி சென்ற ஜனவரி 29 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட போது, வட்டி குறைக்க முடியுமா என்று பரிசீலிக்கும் படி கேட்டுக் கொண்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இதற்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஜனவரி 4 ந் தேதி அன்று வங்கி மேலானமை இயக்குநர்களை சந்தித்த பிறகு, பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பராமரிக்க வங்கிகள் அரை விழுக்காடு வட்டியை குறைப்பது பற்றி பரிசீல்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்