விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்: யெச்சூரி!

விவசாயிகளுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி, புது டெல்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு " விவசாய நிலை- விவசாயிகளின் எதிர்கால நலன் " என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசினார்.

அப்போது பே‌‌சிய அவர், விவசாயிகளுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்க வேண்டும். அவர்களுக்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் வழங்க வேண்டும். அத்துடன் கோதுமை, நெல்லுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும். பொதுவழங்கல் முறையை (ரேஷன்) மாற்றி அமைக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் விவசாய துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், அத்தியாவசிய பொருட்களுக்கு முன் பேர சந்தையில் தடை விதிக்க வேண்டும். இந்த பொருட்கள் முன் பேர சந்தையில் வர்த்தகம் நடப்பதால், இவற்றின் விலை செயற்கையாக அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கின்றது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்துவதை இடதுசாரி கட்சிகள் எதிர்க்கின்றன. இவற்றி்ன் விலையை உயர்த்துவதற்கு முன்பு பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான இறக்குமதிவரி, உற்பத்திவரியை குறைக்க வேண்டும்.

மத்திய அரசு கோதுமைக்கு குவி‌ண்டாலுக்கு ரூ.1,250, நெல்லுக்கு குவ‌ி‌ண்டாலுக்கு ரூ.1,000 குறைந்தபட்ச ஆதார விலையாக அறிவிக்க வேண்டும். இந்த விலை வழங்கினால் தான் விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.

மத்திய அரசு இறக்குமதி செய்யும் கோதுமைக்கு குவி‌ண்டாலுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,600 வழங்க சம்மதித்துள்ளது. ஆனால் உள்நாட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கோதுமைக்கு ரூ. ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை யெச்சூரி சுட்டிக்காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்