விவசாய வளர்ச்சிக்கு நடவடிக்கை: சிதம்பரம்

வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:04 IST)
விவசாய துறை அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் 4 விழுக்காடு வளர்ச்சி அடைய மத்திய அரசு எல்லாவித நடவடிக்கையும் எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புது டெல்லியில் நபார்டு வங்கி (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சிதம்பரம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

முதலில் நம்மிடம் உள்ள வளங்களை விவசாய துறைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அடுத்த 10 முதல் 20 வருடங்களில் இதன் வளர்ச்சி 4 விழுக்காடாக இருக்கும். விவசாய துறையின் வளர்ச்சி அடைவதற்காக அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கும். விவசாய துறையின் தொழில் நுட்ப நிதியை தனியாக ஏற்படுத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும், மனித உழைப்பும், தொழில் நுட்பமும் இருந்தால் விவசாய துறையில் 4 விழுக்காடு வளர்ச்சி அடைவதுடன், அதை மேலும் உயர்த்த முடியும் என்று கூறினார்.

மத்திய புள்ளியியல் துறை நேற்று விவசாய துறை வளர்ச்சி 2.6 விழுக்காடு இருக்கும் என்று அறிவித்தது. இது சென்ற வருடத்தை விட குறைவு. சென்ற வருடம் விவசாய துறை வளர்ச்சி 3.8 விழுக்காடாக இருந்தது.

இந்த வருடம் விவசாய துறை வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று அறிவித்தை குறிப்பிட்டு பேசிய சிதம்பரம், முன் மதிப்பீட்டை விட, விவசாய துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். விவசாய அமைச்சகம் நேற்று சோயா மற்றும் மக்காச் சோளத்தின் உற்பத்தி, இது வரை இல்லாத அளவு அதிகமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த தகவல் புள்ளியியல் துறையின் மதிப்பீட்டில் இடம் பெறவில்லை. விவசாய துறையின் வளர்ச்சி மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்