ரயில்வே பட்ஜெட்: ஒரிசா ரயில் சேவை பாதிப்பு!

புதன், 27 பிப்ரவரி 2008 (17:36 IST)
ரயில்வே பட்ஜெட்டில் ஒரிசா மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி, பா.ஜ.கட்சியினர் ரயில் மறியல் செய்ததால், பல ரயில்கள் பாதிக்கப்பட்டன.

ரயில்வே அமைச்சர் லாலு யாதவ் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், ஒரிசா மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று பல இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரிசா மாநிலத்தில் ஓடும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஒரிசா மாநிலத்தில் ரயில் சேவையை இயக்கும் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரயில் மறியல் போராட்டத்தால், கோல்கொண்டா, குர்தா ரோடு, பிர்காம்பூர், பட்ராக், புவனேஸ்வர், கிரஞ்சங்கா ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் இயக்குவது பாதிக்கப்பட்டன.

பலாசா-புவனேஸ்வர-பலாசா, பிர்கம்பூர்-கட்டாக், கட்டாக்-பட்ராக்-கட்டாக், கட்டாக்-பாரதீப்-கட்டாக், புவனேஸ்வர்-காலிக்கோடி-புவனேஸ்வர், புவனேஸ்லர்-விசாகப்பட்டினம் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் இருபதுக்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக செல்வதாக தெரிவித்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதீய யுவா மோர்ச்சா, கலிங்கா சேனா தொண்டர்கள் ரயில் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ராமச்சந்திரா கார் கூறுகையில், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் நடந்த இளைஞர் பிரிவு கூட்டத்தில், ரயில்வே அமைச்சர் லாலு யாதவ், இணை அமைச்சர் என். ரத்வா ஆகியோரை ஒரிசா மாநிலத்தில் நுழைய அனுமதிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. மற்ற எந்த மத்திய அமைச்சர் மாநிலத்திற்கு வந்தாலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்