மாநில வரிகளை திருப்பி வழங்க வேண்டும்: ஏற்றுமதியாளர்கள்!

மாநில அரசு விதிக்கும் வரிகளையும் திருப்பி வழங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ஜவுளி தொழில் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்தனர். அப்போது ஏற்றுமதியாளர்களுக்கு மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதிக்கின்றன. இவை ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அடக்க விலையில் 6 விழுக்காடாக உள்ளது. மாநில அரசு விதிக்கும் இந்த வரியையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் ஜவுளி ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வாங்கிய கடனை ஒரு வருடம் திருப்பி செலுத்தாமல் இருப்பதற்கான சலுகை வழங்க வேண்டும். இதனால் சில காலத்திற்கு இவைகளிடம் பணப்புழக்கம் இருக்கும். இல்லையெனில் ஏற்றுமதியாளர்களால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது. இந்த கடன் வராக் கடனாக மாறும் அபாயம் ஏற்படும்.

ஜவுளித் துறையின் ஏற்றுமதியாளர்களில் 75 விழுக்காடு, பருத்தி துணி, பருத்தி நூலினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு இறக்குமதி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த கூட்டமைப்பு செயற்கை இழைக்கும், செய்ற்கை இழை தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்து இருப்பதை வரவேற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்