பதப்படுத்தாத தோல் ஏற்றுமதிக்கு அனுமதி வேண்டும்!

முழு அளவு பதப்படுத்தாத தோலை ஏற்றுமதி வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி தோல் சுத்திகரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு உள்ள தோல் தொழிற்சாலைகளில் மிருகங்களின் தோல்கள் பாதியளவு பதப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பாதியளவு பதப்படுத்தப்பட்ட தோல்கள் "ஈஸ்ட் இந்தியா லெதர்" என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஈஸ்ட் இந்தியா லெதர் ரக தோல்களை ஏற்றுமதி வரியில்லாமல் ஏற்றமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தை, திருச்சி தோல் சுத்திகரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு இந்த சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.எம். வரிஸ் முகைதீன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: “மத்திய வர்த்தக அமைச்சகம் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஈஸ்ட் இந்தியா லெதர் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது. அப்போது 15 விழுக்காடு ஏற்றமதி வரியையும் விதித்தது. இந்த ஏற்றுமதி வரி இந்த தொழிலை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
அத்துடன் முழுவதும் பதப்படுத்திய தோல் ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தப்படாத தோலை இறக்குமதி செய்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கின்றனர். அதே போல் தோல் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்பவர்களும் இறக்குமதி வரி விலக்கு உள்ள க்ரஸ்ட் மற்றும் வெட் புளூ ரக தோலை இறக்குமதி செய்கின்றனர். இதை பயன்படுத்தி தோல் பொருட்களை ஏற்றமதி செய்கின்றனர்.

இது போன்ற காரணங்களால் உள் நாட்டு ஈஸ்ட் இந்தியா லெதர் ரகத்தை பதப்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் வேலை இல்லாமல் நெருக்கடியில் உள்ளன. பாதியளவு பதப்படுத்திய தோல்களையும் விற்பனை செய்ய முடியாமல் அதிகளவு இருப்பில் உள்ளது.

அத்துடன் மாசு கட்டுப்பாடு விதிமுறைகளின் படி தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்க வேண்டியதுள்ளது. இதற்காக மெம்பர்னி பயோ ரெக்டர், ரிவர்ஸ் ஒசாமிஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டியதுள்ளது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஆகும் செலவில் அரசு மானியமாக 50 விழுக்காடு வழங்குகின்றது. மீதம் உள்ள செலவை தோல் தொழிற்சாலைகளே ஏற்க வேண்டும்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காத காரணத்தினால், சென்னை உயர்நீதி மன்றத்தின் மாசு கட்டுப்பாடு அமர்வு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படியும், மத்திய அரசு தோல் ஏற்றுமதிக்கு விதித்துள்ள பல நிபந்தனைகளால் திருச்சி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூட வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள தோல் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. (தற்போது ரூ.13,000 கோடி மதிப்புள்ள தோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது).
தற்போது சர்வேச தோல் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2.9 விழுக்காடாக இருக்கின்றது. ஈஸ்ட் இந்தியா லெதர் ஏற்றுமதிக்கு உள்ள நெருக்கடிகள் உட்பட இந்த தொழிலுக்கு உள்ள பல நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால், இந்த ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தோல் பதனிடப்படும் தொழிலுக்கு தேவையான வாட்டில் எக்ஸ்ட்ராக்ட் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். பதப்படுத்தாத தோல்களை இறக்குமதி செய்து மீண்டும் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அந்நிய நாட்டு கூட்டுடன் தொழிற்சாலை தொடங்க அனுமதிக்க வேண்டும். இந்த தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ள காலத்திற்கு ஒவ்வாத விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்