பட்ஜெட்: வீட்டு கடனுக்கு வருமான வரி விலக்கு வேண்டும்!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (10:08 IST)
வீட்டு கடனை திருப்பி செலுத்தும் தொகையில், கடன் நிலுவையில் ரூ.1 லட்சத்திற்கு மட்டும்தான் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

webdunia photoWD
திருப்பி செலுத்தும் கடன் முழுமைக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின் படி, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டுமானத்துறையின் பங்கு மட்டும் 5 விழுக்காடாக உள்ளது.

இத்துடன் ரியல் எஸ்டேட் துறையையும் சேர்த்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்கு மேலும் அதிகரிக்கும்.

இதுமட்டுமின்றி விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக, கட்டுமானத்துறை விளங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

மத்திய அரசு ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமான துறையை பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறைகளாக அங்கிகரித்துள்ளது. இதற்கு கணிசமான நிதியையும் ஒதுக்கியுள்ளது.

இவற்றுடன் நிதி அமைச்சகம் பெரிய திட்டங்களுக்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபர்கள் கட்டும் குடியிருப்பு, அலுவலகம் போன்றவைகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். அப்போதுதான் இதன் பலன்கள் பரந்துபட்ட மக்களுக்கு போய் சேரும்.

இதற்கு முதல் படியாக திருப்பி கட்டும் வீட்டு கடனுக்கு முழுவதுமாக வருமான வரி விலக்கு வழங்க வேண்டும். இப்போதுள்ள வருமான வரிச் சட்டம் ஒரு நிதி ஆண்டில் அதிக பட்சம் ரூ.1 லட்சம் வரை தான் வருமான வரி விலக்கு அளிக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த வருமான வரி விலக்கும் கூட, மற்ற வரி சேமிப்பு திட்டங்களான பிராவிடென்ட் பண்ட், தேசிய சிறுசேமிப்பு பத்திரம், காப்பீடு பிரிமியம் போன்ற தொகைகளையும் சேர்த்து ரூ.1 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இதை மாற்றி வரும் பட்ஜெட்டில் திருப்பி கட்டும் முழு அளவிலான வீட்டு கடனுக்கு வருமான வரி சலுகை வழங்க வேண்டும்.

webdunia photoWD
அப்போதுதான் சொந்த வீடு கட்டும் என்று கடன் வாங்கிய நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் குறிப்பாக மாத ஊதியம் பெறும் பிரிவினர் பலன் பெறுவார்கள். இதற்கான வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.

சொந்த வீடு இல்லாதவர்கள் முதன் முறையாக வாங்கும் வீட்டு கடனை திருப்பி செலுத்தும் போது, அதற்கு உச்சவரம்பு விதிக்காமல், மற்ற வரி சேமிப்பு திட்டங்களை கணக்கில் சேர்க்காமல், திருப்பி கட்டும் கடன் தொகைக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

வருமான வரி சட்டம் 24வது பிரிவு படி, சொந்த வீட்டு கடனுக்கு செலுத்தும் வட்டியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இன்றைய ரியல் எஸ்டேட், மாநகர், நகரங்களில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையுடன் ஒப்பிட்டால், இந்த தொகையால் எவ்வித நன்மையும் இல்லை. எனவே கடனுக்காக செலுத்தும் முழு வட்டிக்கும் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

வீடு, வீட்டு மனை வாங்கும் போது வசூலிக்கப்படும் முத்திரை கட்டணத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலில் கட்டுமான நிறுவனங்கள் நிலங்களை வாங்கி, வீட்டு மனைகளாக பிரிக்கின்றன. இவற்றை குடியிருப்புகளாக அல்லது காலி மனைகளாக விற்பனை செய்யும் போது முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இவை இந்நியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. சில மாநிலங்களில் 13 விழுக்காடு வரை கூட இருக்கின்றது. இதை இந்தியா முழுவதும் ஒரே சீராக இருக்கும் படி செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகளிடம் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

முத்திரைத்தாள் கட்டணம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்படுகிறது. இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, சட்டத்திற்கு புறம்பான வழியை கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்படுகின்றார்கள். இதன் விளைவாக போட்டி பொருளாதாரம் (கருப்பு பணம்) செயல்படுவதற்கு வசதியாக போய்விடுகின்றது.

இதை நீண்டகால அணுகுமுறையாக கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

இத்துடன் கட்டி முடிக்கப்பட்ட வீடு, காலி மனை, அலுவலக கட்டிடம் போன்ற அசையா சொத்துக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விற்பனை செய்தால், ஒவ்வொரு முறையும் முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக வாங்கிய. ஒரு வருடத்திற்குள் விற்பனை செய்தால், இரண்டாவது விதிக்கப்படும் முத்திரை கட்டணத்தை குறிப்பிட்ட விழுக்காடு குறைக்க வேண்டும். மதிப்பு கூட்டு வரியில் கழிவு கொடுப்பது போல், முத்திரை தாள் கட்டணத்தில் கழிவு கொடுக்க வேண்டும். இதனால் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, வீடு வாங்கும் பொதுமக்களும் பயன் பெறுவார்கள்.

கட்டுமானத் துறைக்கு மிக முக்கியமான பொருட்களான இரும்பு கம்பி, சிமென்ட் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி, விற்பனை வரிகளை குறைக்க வேண்டும். இநத வரி இழப்பால் மத்திய அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, இதன் பயன்பாடு அதிகரிக்கும் போது ஈடுகட்டப்படும். அத்துடன் குறைந்த வருவாய் பிரிவினரும் சொந்தமாக வீடு கட்ட முடியும். இது அரசின் எல்லோருக்கும் குடியிருப்பு என்ற கொள்கை நிறைவேறுவதற்கும் உதவிகரமாக இருக்கும்.
மத்திய அரசு வீட்டு வசதிகளுக்கா வழங்கும் மாணியச் சுமையும் குறையும்.

இதற்கான அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.