மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது!
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிப்ரவரி 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் சமர்பிக்க உள்ளார். அடுத்த வருடம் வரும் நாடாளுமனற, சட்டபேரவைத் தேர்தல்ளை மனதில் கொண்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.
இந்திய தொழில் துறையின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், விவசாய துறையின் வளர்ச்சி பின் தங்கி இருக்கின்றது. அத்துடன் விவசாயமே கட்டுப்படியாக கூடிய தொழிலாக இல்லை. விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் இந்தியா அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எண்ணெய் வித்து, பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளது. சுயசார்பு என்பது போய், அந்நிய நாடுகளை நம்பி இருக்கும் அவல நிலை தொடர்கிறது.
நல்ல விளைச்சளை கொடுக்கும், வளமான மண் வளம் உள்ள விவசாய நிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறப்பு பொருளாதார மண்டலம், குடியிருப்பு என்று பல்வேறு பெயர்களில் மாறிவருகின்றது. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள், விளை நிலத்தை விற்பனை செய்து விட்டு, நகரங்களை நோக்கி கூலித் தொழிலாளர்களாக புறப்பட்டு செல்கின்றனர்.
(மற்றொரு புறம் தரிசு நில மேம்பாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது).
இந்த அவலநிலைக்கு காரணம், விவசாயத்திற்கு செய்த செலவை கூட, விளை பொருட்களின் விற்பனையில் கிடைக்கவில்லை என்பதுதான்.
விவசாயிகளின் கடன் சுமைக்கு தீர்வு காணும் விதத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இருக்கும் என்று தெரிகிறது.
சென்ற பொதுத்தேர்தலின் போது ஆளும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா இந்தியா மிளர்கிறது என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது.
இதற்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கிராமப்புற இந்தியாவுக்கு சிறப்பு கவனம் என்ற கோஷத்தை முன் வைத்தது.
மக்களும் கிராமப்புறங்களின், குறிப்பாக விவசாயிகளின் வறுமை, கடன் தொல்லை என்ற கழுத்தை முறிக்கும் நெருக்கடி தீர்ந்து விடும். நமக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என மகிழ்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி, வெத்து கோஷமாகவே போய்விட்டது. விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளானது.
தற்போது அடுத்த வருடம் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உள்ளது.
இந்த முறை தேர்தல் அறிவிப்பாக இல்லாமல், நாடாளுமன்றத்திலேயே பட்ஜெட்டில் விவசாய துறைக்கு பல்வேறு நிவாரணம் அறிவிக்கும் என தெரிகிறது.
இந்த பட்ஜெட்டில்
இந்தியாவில் விவசாய கடனாக ரூ.32 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த கடனகள் முழு அளவிலோ அல்லது குறிப்பிட்ட விழுக்காடோ தள்ளுபடி செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதில் சில கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படலாம். சில வகை கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படலாம்.
விவசாய துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களுக்கு சுமார் ரூ.90 ஆயிரம் கோடி வரை திட்டம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
வர்த்த வங்கிகளில் திரும்பி வராத விவசாய கடன்கள் ரூ.7,500 கோடி வரை இருக்கிறது.
விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள், ஊரக வளர்ச்சி வங்கிகளில் நிலுவையில் ரூ.30 ஆயிரம் கோடி இருக்கிறது. இத்துடன் விவசாய துறையில் மாற்றியமைக்கப்பட்ட கடனாக சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன்களை தள்ளுபடி செய்வது, மாற்றியமைப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம். ஏனெனில் விவசாய உற்பத்தி வளர்ச்சியை 4 விழுக்காடாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
விவசாயம், உர மானியம், நீர் பாசனம், விளை பொருட்களின் குறைந்த பட்ச விலை, சந்தைபடுத்தும் வசதி போன்றவைகளுக்கு கொள்கைகளும், மானியங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.