நேரடி வரிகளை குறைக்க கூடாது: நிபுணர்கள்!

வருமான வரி, நிறுவன வரி, இறக்குமதி-ஏற்றுமதி போன்ற நேரடி வரிகளை குறைக்க கூடாது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணியை தொடங்க உள்ளார். அதற்காக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்காக ஜனவரி 9 ந் தேதி பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பொருளாதார நிபுணர்கள் நிதி அமைச்சரிடம், நேரடி வரி விகிதங்கள் தற்போதுள்ள அளவு தொடர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை, பட்ஜெட்டில் இடம் பெறாத செலவினங்களால், அடுத்த சில வருடங்களில் அரசுக்கு அதிக அளவு நிதிச் சுமை ஏற்படும்.

இப்போது அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயை அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். அத்துடன் மறைமுக வரிகளை குறைக்க வேண்டும். குறிப்பாக பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். இப்போது பெட்ரோலிய பொருட்கள் மீதான விரி, அதன் விலையில் 57 விழுக்காடாக இருக்கின்றது.

நிதி அமைச்சகம் கலால் வரியில் (உற்பத்தி வரி) கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிக வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, வரி விலக்கு அளிப்பதற்கு பதிலாக, அரசு நேரடியாக மானியங்களை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

ஸ்டான்டர்ட் அண்ட் பூவர் ஆய்வு நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய தலைமை பொருளாதார நிபுணர் சுபிர் கோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேச அளவில் உள்ள பொருளாதார நெருக்கடி, அத்துடன் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை, பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட ஆயில் பாண்ட் வழங்கி வரும் நிலையில் வரியை குறைப்பது சரியானதல்ல. உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்புக்கும், வரி வருவாய்க்கும் இடையே உள்ள விகிதாச்சாரம் மாற்றக்கூடாது. சிலர் நேரடி வரியை குறைப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று தெரிவித்ததாக தெரிவித்தார்.


ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில், பெட்ரோலிய பொருட்கள் மீதான மறைமுக வரியை குறைப்பதால், நுகர்வோருக்கு பயன் அளிப்பதுடன், பெட்ரோலிய நிறுவனங்களின் சுமையையும் குறைக்கும். நிதி அமைச்சரிடம் பல பொருளாதார நிபுணர்கள் வரியை குறைப்பதால் அதிக வரிவருவாய் கிடைக்கும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்தனர்.

ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் சுங்க வரியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. ரியல் எஸ்டேட், பங்கு மார்க்கெட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகள் மீது லெவி (வரி) விதிக்கப்பட்டால், இந்த முதலீடு கட்டுப்படுத்தலாம். அரசு மானியங்களை குறைக்க வேண்டும் அல்லது பயனாளிகள் நேரடியாக பயன் பெறும் வகையில் மாணியங்களுக்கு வவுச்சரை வழங்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்