ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ரூ.25 ஆயிரம் கோடி உபரி நிதியுடன் இன்று அடுத்த நிதி ஆண்டிற்கான (2008-09) நிதி நிலை நிலை அறிக்கையை மக்களவையில் சமர்பித்தார்.
இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பி்ப்பதாக இருந்தது.
ஆனால் காலையில் மக்களவை கூடியதும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவசாயிகளின் தற்கொலை பற்றி விவாதிக்க வேண்டும். விவசாயிகளி்ன் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
இவர்களுக்கு இடது சாரி கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக குரல் எழுப்பினர்.
மக்களவை சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜியின் இருக்கைக்கு அருகே சென்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் சபையில் அமளி நிலவியது. எனவே சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி நண்பகல் 12 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.
இதே பிரச்சனையை மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் வெங்கையா நாயுடு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அமர் சிங் ஆகியோர் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதுடன், விவசாய துறை அமைச்சர் சரத் பவாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் மாநிலங்களை தலைவர் ஹமீத் அன்சாரி சபையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
மக்களவை மீண்டும் கூடியதும் கர்நாடக மாநில உறுப்பினர்கள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கன்னட சமுதாயத்தை அவமதித்து விட்டார் என்று கூறி, இதற்கு அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே லாலு யாதவ் இதை மறுத்ததுடன், இது தொடர்பாக தான் ஏற்கனவே விளக்கமளித்து விட்டதாகவும், தனக்கு கர்நாடக மக்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என்று கூறி, உறுப்பினர்களை அமைதிபடுத்தினார்.
அதற்கு பிறகு ரயில்வே நிதி நிலை அறிக்கையை சமர்பிக்க தொடங்கினார் லூலு பிரசாத் பலத்த சிரிப்புக்கு இடையிலும், சில நேரங்களில் உறுப்பினர்கள் மிகுந்த ஆவலுடன் கவனித்ததையும் பார்த்துக் கொண்டே சுமார் 1 மணி 45 நிமிடங்கள் நிதி நிலை அறிக்கையை படித்தார்.
மக்களவையில் அனைத்து தரப்பு உறுப்பினர்களும், எவ்வித இடையூறு செய்யாமல் உன்னிப்பாக அவரின் உரையை கவனித்தார்கள்.
லாலு பிரசாத் அவரது உரையில், கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில்வேயில் உபரி நிதி ரூ.68,778 கோடி இருப்பதாக தெரிவித்தார். தான் விதைத்த செடி இன்று கனிகள் கொடுக்க துவங்கிவிட்டன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அவரின் சாதனைகளை குறிப்பிட்டு, நான் ரயில்வேக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளதை இன்று உலகம் அங்கீகரித்துள்ளது என்று கூறினார். ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, நான் கனவு மட்டும் காணவில்லை. அதை நிதர்சன உண்மையாக்கி உள்ளேன் என்று கூறினார்.
ரயில்வேவை நவீனமயமாக்குவதுடன், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் நாட்டில் உள்ள மொத்த ரயில் நிலையங்களில், பாதிக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைப்பதாக அறிவித்தார்.
அத்துடன் எல்லா ரயில் பெட்டிகளும், துரு பிடிக்காத, பராமரிக்க வசதியாக எவர்சில்வர் தகடு பயன்படுத்தி தயாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
தற்போதுள்ள ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து வருடத்திற்கு 65 கோடி டன்னாக உள்ளது. இதை 2011 ஆம் ஆண்டில் 110 கோடி டன்னாக அதிகரிக்கப்படும்.
சதாப்தி,ராஜதானி போன்ற சொகுசு ரயில்களில் சுகாதாரம் இல்லை என்ற புகார் அடிக்கடி எழுகின்றது. இதை தவிர்க்க ரயில் நிலையங்களில் மட்டுமல்லாமல், ரயில்கள் ஓடும் போதே குப்பைகள் அகற்றுதல் போன்ற சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும்.
பயணிகளின் வசதிக்காக ரயில் புறப்படும், வந்து சேரும் நேரத்தை டிஜிட்டல் போர்டுகளின் மூலம் அறிவிக்கப்படும்.
ரயில்வே நிலையங்களில் உரிமை பெற்ற போர்ட்டர்கள், கேங்க்மேன்கள் போல் நான்காம் வகுப்பு பணியாளர்களாக ரயில்வேயில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
கர்ப்பஸ்திரிகள், கைக் குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்கள் பயணிகள் நெருக்கடியில் சிக்கி சிரமப்படாமல் இருக்க ராஜூவ் காந்தி அறக்கட்டளையுடன் இணைந்து தாய்-சேய் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுப்பினர்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார்.
ரயில் இருப்பு பாதையும், சாலையும் சந்திக்கும் இடங்களில் ரயில்வே ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதை தடுக்க அனைத்து சந்திப்புகளிலும் கண்காணிப்பு பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று லாலு பிரசாத் அறிவித்தார்.