சிறு தொழில்களுக்கு உற்பத்தி வரி குறைக்க வேண்டும்

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (15:32 IST)
சிறு மற்றும் நடுத்தர பிரிவில் உள்ள தொழில்களுக்கு வட்டி சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்று அசோசெம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அசோசெம் என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையினருக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளது.

இதன் விபரம் வருமாறு.

மத்திய நிதி அமைச்சர் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கடனுக்கான வட்டிக்கு சலுகை அளிக்க கூடாது. ரூபாயின் மதிப்பு உயர்வால் சிறு மற்றும் நடுத்த பிரிவு தொழில் துறையினர் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இலாபம் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாமல் நெருக்கடியில் உள்ளன. எனவே நிதி அமைச்சர் இந்த தொழில் பிரிவினர் வாங்கும் கடனுக்கான வட்டிக்கு சலுகை அறிவிக்க வேண்டும்.

இந்த தொழில் பிரிவுகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீது 16 முதல் 24 விழுக்காடு உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இதை 12 விழுக்காடாக குறைக்க வேண்டும்.

சிறு நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதற்கு வங்கி உத்திரவாதம், சொத்து அடமானம் வைக்கும் படி வலியுறுத்துகின்றன. இதனால் பணப்புழக்கம் குறைகின்றது. இவைகள் 15 முதல் 16 விழுக்காடுகளுக்கு கடன் வாங்க வேண்டியதுள்ளது. இந்த கடனுக்கான வட்டி 18 விழுக்காடு வரை அதிகரித்து விடுகிறது. எனவே இந்த நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு மற்றும் குறுந்தொழில் பிரிவு நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லை அதிக அளவு இருக்கின்றது. அவர்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு பதிலளிக்க வேண்டியதுள்ளது. 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை, மேற்பார்வை செய்கின்றனர். இவர்களுக்கு விளக்கம் அளிப்பதிலேயே தொழில் நடத்துபவர்களின் சக்தியும் நேரமும் விரையமாகிவிடுகின்றது. எனவே இந்த மேற்பார்வை அதிகாரிகளை, ஆய்வாளர்களை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிதி அமைச்சரிடம் அசோசெம் சமர்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்