கூடுதல் வரி நிரந்தரமானதா?

webdunia photoFILE
மத்திய அரசுக்காக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் வருமான வரி, கலால் மற்றும் சுங்க வரிகள் மீது கூடுதல் வரி விதிப்பது வாடிக்கையாகிவிட்டது.

மாநில அரசுகளும் தங்கள் பங்குகளுக்கு விற்பனை வரி மீது கூடுதல் (Surcharge) வரி விதிக்கின்றனர

கூடுதல் வரி அல்லது செஸ் என்பது அவசர நிலைமையில் குறுகிய காலத்திற்கு வரிகள் மீது போடப்படும் கூடுதல் வரிகளாகும். இது குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு வருடம் அல்லது ஐந்து வருடங்கள் என குறுகிய காலத்திற்கு வசூலிக்கப்பட்டால் நியாயம். ஆனால் இதுவே நிரந்தரம் என்றால், கூடுதல், செஸ் வரி என்று மறைமுகமாக வரியை உயர்த்துவதை விட, நேரடியாகவே வரியை உயர்த்திவிடலாம்.

நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டிருக்கும் போது அல்லது அந்நிய நாட்டு படையெடுப்பின் போது அரசுக்கு அதிகளவு வருவாய் வேண்டும். அந்த மாதிரியான அவசர நிலை காலங்களில் குறுகிய காலத்திற்கு கூடுதல் வரி விதித்தால் வரி கட்டுபவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.

இதுவே தொடர்ந்தால், நல்ல குடிமகனாக வரியை கட்டுங்கள். அடிப்படை வசதிகளை பெருக்க தவறாது வரியை கட்டுங்கள். வரி கட்டுவது உங்கள் குடிமகனின் தலையாய கடமை என்று அறிவுரை கூறுவதற்கு ஆட்சியாளர்கள் தார்மீக ரீதியாக தகுதியை இழந்து விடுவார்கள்.

முன்பு கார்கில் போரின் போதும், குஜராத் நில நடுக்கம் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த வரியை செலுத்தியவர்கள் எவ்வித ஆட்சேபனையும் இன்றி செலுத்தினார்கள்.

ஆனால் இதுவே தொடர் கதையாக மாறினால் வரி செலுத்த வேண்டும் என்று மனதார நினைப்பவர்களின் தேசபக்தி கூட மழுங்கிப் போய்விடும்.

2004-05 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அடிப்படை கல்விக்கான செலவுகளை ஈடுகட்ட வருமான வரி மீது 2 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

2007-08 ஆம் ஆண்டு உயர்கல்வி செலவுக்காக மேலும் கூடுதலாக 1 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இவை சமீப காலங்களில் போடப்பட்ட கூடுதல் வரிகள்.

இவை மட்டுமல்லாமல் 1999-2000 ஆம் ஆணடு பற்றாக்குறையை ஈடுகட்டவும், கூடுதல் செலவினங்களுக்காகவும், மேம்பாட்டு செலவுக்காகவும் 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்