எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? நம் தமிழ் மக்கள் முக்கியமா?- சத்யராஜ் கண்டனம்

புதன், 23 மே 2018 (15:23 IST)
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தின் 100வது நாளான நேற்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி காலை பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 
 
இதனால் பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இதுவரை 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறை அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு சத்யராஜ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் இறந்தவர்கள் அத்தனை பேரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். 

ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கு வாழும் நம் சொந்தங்களும், உறவுகளும், நமது தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். 
 
இந்த சம்பவம் நெஞ்சம் பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை உங்களில் ஒருவனாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்