குட்கா விவகாரம் - டி.ஜி,பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் கைது

வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (10:30 IST)
குட்கா விவகாரத்தில் தொடர்புடைய டி.ஜி.பி. பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.
 
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
எம்.எல்.ஏ அன்பழகன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை ஜெ.அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றனர். டி.ஜி.பி. அலுவலகத்தை நெருங்கியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்