இதெல்லாம் கோவா பீச் இல்ல.. நம்ம தமிழ்நாட்டு பீச்தான்! – சூப்பரான 5 கடற்கரை சுற்றுலா பகுதிகள்!

Prasanth Karthick

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:51 IST)
கோடை சுற்றுலா என்றாலே சுற்றுலா விரும்பிகளுக்கு பெரும்பாலும் ரெண்டு சாய்ஸ்தான். ஒன்று மலைப்பிரதேசங்கள் மற்றொன்று கடற்கரைகள். இந்தியாவில் கடற்கரை நகரங்களில் பிரபலமானது கோவா.



அந்த கோவா கடற்கரைக்கு நிகரான அழகிய கடற்கரைகள் எலைட்டான பல வசதிகளுடன் தமிழகத்திலும் உள்ளது. கோவா வரை போக முடியாதவர்கள் இங்கிருக்கும் கடற்கரைகளிலேயே கோவாவுக்கு நிகரான சொகுசை, கடல் அழகை ரசிக்கலாம். அப்படியான தமிழ்நாட்டின் அழகான 5 கடற்கரைகள் பற்றி பார்ப்போம்.

ஆரோவில் கடற்கரை, புதுச்சேரி

யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதிகம் தமிழர்களை கொண்ட பகுதியான புதுச்சேரி அங்கு கிடைக்கும் மது வகைகளுக்கும், அழகான கடற்கரைக்கும் பெயர் போனது. இங்குள்ள மாத்ரிமந்திரில் மிகவும் அமைதியாக இயற்கை வழியில் யோகா செய்யலாம். கடற்கரையில் ஓய்வாக சாய்வு நாற்காலியில் அமர்ந்து கடல் அழகை ரசித்தபடி இளநீர் குடிக்கலாம்.

கோவளம் கடற்கரை, மகாபலிபுரம்



தென்னிந்தியாவின் பிரபலமான பீச் ரெசார்ட் பகுதிதான் கோவளம் கடற்கரை. சென்னைக்கு மிக அருகில் உள்ள இந்த கடற்கரையில் நீச்சல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல நீர் சாகச விளையாட்டுகளை மேற்கொள்ளலாம். உலக பிரபலமான ஆலிவர் ரிட்லி ஆமைகள் இந்த கடற்கரை அருகேதான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஆண்டுதோறும் வரும். அந்த சமயங்களில் கடற்கரையில் நின்று ஏராளமான ஆமைக்குஞ்சுகள் கடலுக்கு செல்வதை பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

சங்குதுறை கடற்கரை, கன்னியாகுமரி



கன்னியாக்குமரியில் 10 கி.மீ தூரம் நகரத்தை விட்டு அப்பால் உள்ள அழகிய பகுதிதான் சங்குதுறை கடற்கரை. இங்கிருந்து கடலின் அழகையும், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையையும் கண்டு ரசிக்கலாம். அதிக கூட்டமற்ற இந்த கடற்கரை மன அமைதியாக பொழுதை கழிக்கவும், நீர் விளையாட்டுகளுக்கும் சிறந்த சாய்ஸ். இங்கு கடற்கரைகளில் சங்கு அதிகமாக கிடைப்பதால் இந்த பெயர் என கூறப்படுகிறது.

நெட்டுப்பாக்கம் கடற்கரை, சென்னை



சென்னை எண்ணூர் துறைமுகம் தாண்டி உள்ள நெட்டுப்பாக்கம் கடற்கரை தமிழகத்தின் அழகான கடற்கரைகளில் ஒன்று. இங்குள்ள உடைந்த பாலங்களில் ஏறி மக்கள் கடல் அழகை ரசிப்பதோடு, புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

தனுஷ்கோடி கடற்கரை, ராமேஸ்வரம்



ராமேஸ்வரம் கடல் சூழ்ந்த நகரம் மட்டுமல்ல பல கடற்கரைகளும் சூழ்ந்த நகரம். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடி கடற்கரை வங்காள விரிகுடாவின் மொத்த கடல் அழகையும் கண்ணுக்கு விருந்தாக்குகிறது. தெளிவான டெலஸ்கோப் கொண்டு அங்கிருந்து இலங்கையையே காண முடியுமாம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்