வாக்குப்பதிவு நிறைவு : தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவு

செவ்வாய், 17 மே 2016 (09:59 IST)
தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 


 

 
தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தனர். மேலும், பொது மக்கள் மற்றும் பெரும்பாலான திரைப்பட நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
 
தமிழகத்தில் நேற்று காலை முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மழை காரணமாக சில மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு மந்தமானது. 
 
மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. அதற்கடுத்து, மதியம் 3 மணி நிலவரப்படி 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது.
 
ஆனால், ஏற்கனவே வரிசையில் காத்திருந்த பலருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் வழங்கப்பட்ட அனைவரும், வாக்களித்த பின்புதான், இறுதியான வாக்குபதிவு சதவீதம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது. 
 
அதன்படி, இறுதியாக தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 
பென்னாகரம் மற்றும் எடப்பாடி தொகுதியில் அதிக பட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்த பட்சமாக சென்னையி துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், கேரளாவில் 6 மணி வரை 75 சதவீதமும், புதுச்சேரியில் 81.94 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்