பிரச்சாரத்தில் கலங்க வைத்த தந்தை... ராஜன் செல்லப்பாவுக்கு புகழாரம்!
புதன், 31 மார்ச் 2021 (12:31 IST)
தமிழகத்தில் வாக்குபதிவுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பிரசார களத்தில், ஆடல், பாடல் என பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் திருப்பரங்குன்ற தொகுதி வேட்பாளர் வி.வி ராஜன் செல்லப்வின் மகனான ராஜ் சத்யன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலையூர் பகுதியில் தனது தந்தைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சுப்ரமணியன் என்ற ஆசிரியர் , சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கு தான் ஊரார் முன்னிலையில், நன்றி சொல்ல வேண்டும் என மைக்கை வாங்கி பேச தொடங்கினார். பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் நடராஜன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், பள்ளிக்கு சரிவர செல்ல முடியாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில், கொரோனா பெருந் தொற்று காரணமாக, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் அறிவித்தது தமிழக அரசு. ஆனால் மாணவன் நடராஜனுக்கு மட்டும் பல்வேறு இடையூறுகளால் தேர்வு முடிவுகள் வெளிவராமல் இருந்துள்ளது. ஒரு புறம் தனது மகனின் புற்றுநோய்க்கான மருத்துவத்திற்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பெறவும், தந்தை சுப்ரமனியன், அலைந்து திரிந்துள்ளார்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, சட்டமன்ற உறுப்பினர் , ராஜன் செல்லப்பாவின் உதவியை தான் நாடியதாகவும், அப்போது அவர், பள்ளி - கல்வி துறைக்கு, இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியதாகவும் தெரிவித்தார். பள்ளிகல்விதுறை, தேர்தல்நேரம் என்பதால் மாணவனின் முடிவு வர தாமதமாகியுள்ளதாகவும், விரைவில் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தனது மகனுக்கு விரைவில் ரிசல்ட் வந்துவிடும் என்றும், தனது மகனுக்கு ராஜன் செல்லப்பா செய்த உதவி, தனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்த உதவிக்கு, நன்றி தெரிவித்துக்கொண்ட தந்தையின் பதிவு காண்போரை கண்கலங்க செய்தது.