காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினைகளுக்காக, சினிமாத்துறையினரின் கண்டன அறவழிப் போராட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல், ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆனால், அஜித் மட்டும் வரவில்லை. சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார் அஜித். அதனால்தான் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பதில்லை; நடிகர் சங்க கட்டிடம் பூமி பூஜையில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நேற்று நடந்தது மக்களுக்கான போராட்டம். ஒட்டுமொத்த தமிழகத்துக்கான இந்தப் போராட்டத்தில் அஜித்தும் கலந்து கொள்வார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசிவரை அவர் வரவேயில்லை. ‘மக்கள் பிரச்னைக்காகக்கூட அஜித் வரமாட்டாரா?’ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.