அவர் நடிப்பில் உருவான மத கஜ ராஜா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விஷால் சரியாகப் பேசமுடியாமல் கைகள் நடுங்கப் பேசினார். ஆளும் மிகவும் இளைத்து ஒல்லியாகக் காணப்பட்டார். இதனால் அவர் உடல்நிலைக் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவின. ஆனால் அவருக்கு வெறும் வைரஸ் காய்ச்சல்தான் என்று அவரது தரப்பில் விளக்கம் அளித்தனர். அதே போல ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் அவர் மயக்கமடைந்து விழுந்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில் சமீபத்தில் விஷால் தனது திருமணத்துக்குப் பெண்பார்த்துவிட்டதாகவும், இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என்றும் அறிவித்திருந்தார். இதற்கிடையில் விஷால் தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் தன்ஷிகாவைதான் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. தன்ஷிகா பேராண்மை, பரதேசி மற்றும் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்று தன்ஷிகா நடித்துள்ள ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார். அந்த நிகழ்ச்சியில் இதை அறிவிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.