போலீஸ் வேடத்தில் ஒரு கம்பீரம்.. விஜயகாந்த் நடித்த போலீஸ் கேரக்டர்கள்..!
வியாழன், 28 டிசம்பர் 2023 (12:40 IST)
திரையுலகில் போலீஸ் கேரக்டர் என்றால் ஒரு சிலருக்கு தான் மிகவும் கம்பீரமாக அமையும். எம்ஜிஆர், சிவாஜியை அடுத்த போலீஸ் கேரக்டர் என்றால் மிகவும் கச்சிதமாகவும் பொருத்தமாகவும் இருந்தவர் விஜயகாந்த் தான்.
விஜயகாந்த் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்து உள்ளார். ஆபாவாணன் இயக்கத்தில் உருவான ஊமைவழிகள் திரைப்படத்தில் அவர் சில நிமிடங்கள் வந்தாலும் போலீஸ் கேரக்டரில் கம்பீரமாக நடித்திருப்பார்.
அதன் பிறகு முழுக்க முழுக்க ஒரு போலீஸ் கேரக்டரில் விஜயகாந்த் நடித்தது மாநகர காவல். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து தர்மம் வெல்லும் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் என்பதும் அதில் ஒரு வேடத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருப்பார்.
அதன் பின்னர் சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தில் ஒரு கம்பீரமான காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். மேலும் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படங்களில் ஒன்று வீரம் விளைஞ்ச மண்ணு. இந்த படத்தில் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து சேதுபதி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு கறாரான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். மேலும் சரத்குமார் உடன் விஜயகாந்த் நடித்த தாய் மொழி திரைப்படத்திலும் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். விஜயகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்த படங்களில் சிறப்பான படமாக அமைந்தது சத்ரியன். இந்த படத்தில் அவரும் அதிரடி போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்.
அதேபோல் விஜயகாந்த் நடித்த இன்னொரு போலீஸ் கேரக்டரில் அது ஹானஸ்ட் ராஜ் படம் தான். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து விஜயகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்த இன்னொரு படம் வல்லரசு என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜயகாந்த் போலீஸ் கேரக்டரில் வாஞ்சிநாதன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 20க்கும் மேற்பட்ட படங்களில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து, காவல்துறைக்கும் காவலர்களுக்கும் பெருமையை சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது.