தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனை ரத்து - மோடிக்கு விஜய் நன்றி கடிதம்

சனி, 22 நவம்பர் 2014 (12:07 IST)
தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் தூக்குத் தண்டனையை இலங்கை ரத்து செய்ததுடன் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பியும் வைத்தது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும், மீனவர்கள் போராட ஆரம்பித்தபின் இந்திய அரசின் தலையீட்டில் அவர்கள் விடுதலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. 
பாருங்க... அரசு எப்படி செயல்படுது என்று காட்ட மட்டுமே இந்த கைது நடவடிக்கையும், விடுதலை நாடகமும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதற்கான எந்த சூழ்நிலையையும் இந்திய அரசு இதுவரை உருவாக்கவில்லை.
 
இந்நிலையில் மீனவர்களின் விடுதலைக்கு மோடிக்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு ஐகோர்ட்டு தூக்கு தண்டனை விதித்திருந்தது.
 
மேற்கண்ட மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற தாங்கள் எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகுந்த பாராட்டுக்குரியது. 5 மீனவர்களின் விடுதலையால் 5 குடும்பங்கள் மட்டும் சந்தோஷமடையவில்லை. ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.
 
தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள் மேலும் பயத்தையும், அச்சுறுத்தலையும் தரும்.
 
இந்த சமூக மக்கள் இனி வருங்காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித்தர தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்.
 
- இவ்வாறு கடிதத்தில் விஜய் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்