கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது இந்தியன் 2 திரைப்படம் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வில்லனாக நடிக்கை வைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தில் இவர்களின் கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து இந்த முயற்சி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.