அமலா பால் ஹீரோயினாக அறிமுகமான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ள ஹரிஷ், கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதன்பிறகு அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாடலான ரைஸா வில்சனுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஹரிஷ். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைப்பதுடன், தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படத்தில் ஹரிஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில், ஹரிஷ் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இவர், விஜய் ஆண்டனியின் ‘காளி’ பட ஹீரோயின்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.