வீரப்பன் - வர்மாவின் அடுத்த டார்கெட்

வியாழன், 16 ஏப்ரல் 2015 (10:33 IST)
மாதம் ஒரு படத்தை இயக்கி வெளியிட்டுவரும், ராம் கோபால் வர்மாவின் அடுத்த டார்கெட், சந்தனக் கடத்தல் வீரப்பன். கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாள்கள் வீரப்பன் சிறை வைத்த சம்பவத்தை வர்மா படமாக்குகிறார்.
 
கடத்தல் மட்டுமின்றி, வீரப்பனை கொலை செய்த நிகழ்வையும் படமாக்குகிறார் வர்மா. த கில்லிங் வீரப்பன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடிக்கிறார். படம் குறித்துப் பேசிய வர்மா,
 
மூன்று மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனை பிடிக்க ரூ.600 கோடி செலவானது. 16 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் 15 வருடங்கள் தேடுதல் வேட்டை நடந்தது. 1200 போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். 
 
ஒசாமா பின்லேடனை விட 100 மடங்கு திருப்பங்கள் கொண்டதாக வீரப்பன் வாழ்க்கை உள்ளது. வீரப்பன் பிடிப்பட்ட சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை படத்தில் கொண்டு வருவேன் என்றார். 
 
வீரப்பனை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் அப்பாவி ஜனங்களை கொடுமைப்படுத்திய, கொலை செய்த, பெண்களை கற்பழித்த போலீசாரின் கதையையும் வர்மா படத்தில் காண்பித்தால் அவருக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்