தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் படங்கள் எப்போது ரிலிஸ் ஆனாலும் அது அவர்களின் ரசிகர்களுக்குப் பண்டிகைதான். அப்படி இருக்கையில் பண்டிகைக் காலத்தில் ரிலிஸானால் சொல்லவா வேண்டும் ? அதிகாலைக் காட்சி, நள்ளிரவுக் காட்சிகள் எனதிரையிட்டு திரையரங்கங்கள் வசூலை அள்ளிவிடும். அதிலும் ரஜினி, அஜித் என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸாவதால் தியேட்டர் அதிபர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
நாளை ரிலிஸாக உள்ள அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் நாளை வெளியாவதை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்படும் நிலையில் தியேட்டர் அதிபர்களே டிக்கெட்களை புக் செய்துவிட்ட மாதிரி கணக்குக் காட்டிவிட்டு இப்போது கவுண்ட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருகமபாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டர் அஜித் ரசிகர்களின் கோட்டையாகத் திகழ்கிறது. அந்த தியேட்டரில் தற்போது கவுண்ட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாகவும் அங்கு அஜித் ரசிகர்கள் கூடி அநியாய விலைக்கு டிக்கெட்களை வாங்கி வருகின்றனர். இந்த முறைகேட்டு டிக்கெட் விற்பனைக்கு சாட்சி இருக்கக் கூடாதென கவுண்ட்டர்களில் வழங்கப்படும் டிகெக்ட்களில் விலை இன்றி பிரிண்ட் செய்து தருவதாகக் கூறப்படுகிறது.